பா.ஜனதா வார்டு நிர்வாகி வீட்டில் உணவு சாப்பிட்ட அண்ணாமலை
வாடிப்பட்டி அருகே பா.ஜனதா வார்டு நிர்வாகி வீட்டில் அண்ணாமலை உணவு சாப்பிட்டார்.
வாடிப்பட்டி,
திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதற்குரிய முன் ஏற்பாடுகளை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சென்று பார்வையிட்டார். பின்னர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணம்பட்டிக்கு வந்த அவர், கட்சியின் வார்டு செயலாளர் ஈசுவரன் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார். அங்குள்ள மந்தை திடலில் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் கிராமமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில் ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. பட்டியல் சமுதாய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர சட்டமேதை அம்பேத்கர் பாடுபட்டார். அவர் வழியில் பா.ஜனதா கட்சியும் பட்டியல் சமுதாய மக்களின் உயர்வுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகள்தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கட்சியின் பட்டியல் பிரிவு மாநில தலைவர் தடா பெரியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம், மகாலட்சுமி, பழனிவேல்சாமி, மாவட்ட தலைவர் ராஜசிம்மன், கே.ஆர்.முரளி ராமசாமி உள்பட பலர் வந்திருந்தனர்.