ஓசோன் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ராமநாதபுரத்தில் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஓசோன் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பனைக்குளம்,
ராமநாதபுரத்தில் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை, நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து சர்வதேச ஓசோன் படலம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலத்துக்கு கல்லூரி முதல்வர் மாலதி, துணை முதல்வர் மகிமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை ராமநாதபுரம் உதவி துணை சூப்பிரண்டு ராஜா மற்றும் கல்லூரி தாளாளர் செல்லதுரை அப்துல்லா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஓசோன் படலத்தை பாதுகாக்க மரங்களை வளர்ப்போம் என்றும், குளிர்சாதன பெட்டி, ஏசி போன்ற பொருட்களின் பயன்பாட்டை குறைப்போம் என்றும் கோஷங்களை எழுப்பினர். ஊர்வலம் ராமநாதபுரம் அரண்மனை சாலையில் ஆரம்பித்து, வண்டிக்கார தெரு வழியாக அறிஞர் அண்ணா நடுநிலைப்பள்ளி வரையிலும் சென்றது. பள்ளியில் வள்ளி விநாயகம் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வரவேற்றார். இதில் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் உதவி தலைமை ஆசிரியை மாதவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் செய்யது அம்மாள் கல்லூரி வேதியியல் துறை தலைவர் தமீமா, இந்தியன் ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் ரமேஷ், பொருளாளர் குணசேகரன் ஆகியோர் பேசினார்கள். இதில் வேதியியல் துறை பேராசிரியர்கள் அய்யனார், செல்வகுமார், இயற்பியல் துறை தலைவர் பிரபாவதி மற்றும் பேராசிரியர் லெட்சுமணன், விலங்கியல் துறை பேராசிரியை சந்திரலேகா கலந்து கொண்டனர். முடிவில் விஜயகுமார் நன்றி கூறினார். இந்த ஏற்பாடுகளை அலுவலக நிர்வாகிகள் சாகுல் ஹமீது மற்றும் சபியுல்லா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.