300 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா
கும்மனூரில் நடந்த எருதுவிடும் விழாவில் 300 காளைகள் பங்கேற்றன. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குருபரப்பள்ளி
கும்மனூரில் நடந்த எருதுவிடும் விழாவில் 300 காளைகள் பங்கேற்றன. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
எருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கும்மனூர் கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடந்தது. இதில் தாசரிப்பள்ளி, கொண்டேப்பள்ளி, ஜீனூர், குந்தாரப்பள்ளி, செம்படமுத்தூர் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
விழாவையொட்டி காளைகள் ஓடும் பகுதியில் இருபுறமும் கட்டையால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. எருது விடும் விழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இந்த விழாவில் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் அந்த காளைகளை இளைஞர்கள் விரட்டி சென்றனர்.
போலீசார் பாதுகாப்பு
இந்த போட்டியில் குறிப்பிடப்பட்ட 120 மீ. தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கெடுப்பு செய்து பரிசுகள் வழங்கப்பட்டன. அதன் படி முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-வது பரிசாக ரூ.75 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டன. விழாவில் மொத்தம் 50 காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அரசின் விதிமுறைகள், நிபந்தனைகள் முழுவதுமாக பின்பற்றப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விழாவையொட்டி கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி கிருஷ்ணன் மற்றும் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.