தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான 1,355 வாகனங்களில் கலெக்டர் ஆய்வு
கோவையில் தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான 1,355 வாகனங்களில் கலெக்டர் கிராந்திகுமார் ஆய்வு செய்தார்.
கோவையில் தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான 1,355 வாகனங்களில் கலெக்டர் கிராந்திகுமார் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் வருகிற 7-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி தனியார் பள்ளி வாகனங்களை போக்குவரத்து துறை, பள்ளி கல்வித்துறை, போலீசார் ஆகியோர் இணைந்து கூட்டாய்வு செய்யும் பணி கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதற்காக கோவை முழுவதும் இருந்து 1000-த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் பி.ஆர்.எஸ். மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த வாகனங்களை கலெக்டர் கிராந்தி குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், உதவி கலெக்டர் சவுமியா ஆனந்த் மற்றும் வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
வாகனங்களில் அவசர கால கதவு சரியாக செயல்படு கிறதா?, வேககட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டு உள்ளதா?, தீயணைப்பு கருவிகள் உள்ளதா?, முதலுதவி பெட்டி உள்ளதா? என்பது குறித்து கலெக்டர் கிராந்திகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
17 அம்சங்கள்
கோவை மாவட்டத்தில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட 230 தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான 1355 வாகனங்களை பார்வையிட்டு கூட்டாய்வு நடத்தப்பட்டு வருகின்றன.
தனியார் பள்ளி வாகனங்களில் அரசு தெரிவித்த பாதுகாப்பு உள்பட 17 அம்சங்கள் பின்பற்றப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த அறிவுரைகள் மற்றும் தொழிலாளர் நல வாரியத்தின் மூலமாக டிரைவர்களுக்கான நல திட்டங்களை விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது.
வாகனங்கள் நல்ல நிலையில் உள்ளதா என தினமும் டிரைவர்கள் பரிசோதிக்க வேண்டும். வாகனத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனடி யாக பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்கவேண்டும். அந்த பிரச்சி னைகளை சரிசெய்த பிறகுதான் வாகனங்களை இயக்கவேண்டும்.
கட்டாயப்படுத்தக் கூடாது
கோவை மாவட்ட சாலைகளில் சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுபோன்ற நேரங்களில் பள்ளிக்கூட வாகன டிரைவர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று வர வேண்டும் என்று பள்ளிநிர்வாகங்கள் கட்டாயப்படுத்த கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து தனியார் பள்ளி வாகன டிரைவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அதில் டிரைவர்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர். இதையடுத்து வாகனங்களில் தீ ஏற்பட்டால் எவ்வாறு அணைக்க வேண்டும் என்று தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்.