தண்டவாளத்தில் கவிழ்ந்து கிடந்த லாரி: 'டார்ச் லைட்' அடித்து ரெயிலை நிறுத்திய தம்பதிக்கு குவியும் பாராட்டு

'டார்ச்லைட்' அடித்து ரெயிலை நிறுத்திய தம்பதியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Update: 2024-02-25 20:26 GMT

தென்காசி,

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே மைலப்புரம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் அரசப்பன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 44). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவில் கேரள மாநிலத்தில் இருந்து தனது லாரியில் பிளைவுட் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடிக்கு புறப்பட்டார்.

அந்த லாரியில் கிளீனராக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குவளைக்கண்ணியைச் சேர்ந்த பெருமாள் (28) இருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை அருகே புளியரை 'எஸ்' வளைவு பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோர தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு சுமார் 50 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்தது. அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் லாரியின் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்துக்குள்ளான லாரியில் இருந்து கிளீனர் பெருமாள் வெளியே குதித்து அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதற்கிடையே சாலையோர பள்ளத்தில் பாய்ந்த லாரி தண்டவாளத்தில் விழுந்த சத்தத்தைக் கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த ரப்பர் தோட்ட தொழிலாளர்களான வயதான தம்பதி சண்முகையா (66), வடக்கத்தி அம்மாள் (60) ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது நெல்லையில் இருந்து செங்கோட்டை வழியாக பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த வழியாக வேகமாக வந்து கொண்டிருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சண்முகையா, வடக்கத்தி அம்மாள் தம்பதி உடனே தங்களிடம் இருந்த டார்ச்லைட்டை ஒளிரவிட்டு அசைத்தவாறு தண்டவாளத்தில் ரெயில் வந்த திசை நோக்கி வேகமாக ஓடினர்.

இதனை பார்த்த என்ஜின் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தினார். தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்துக்கு முன்பாக ரெயில் நின்றது. இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ரெயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். லாரி டிரைவர் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தண்டவாளத்தில் கிடந்த லாரியை பொக்லைன் எந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தினர். இதையடுத்து சுமார் 4 மணி நேரம் தாமதமாக பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இதுதொடர்பாக தென்காசி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்ததும், வயதான தம்பதி விரைந்து சென்று 'டார்ச்லைட்' அடித்து ரெயிலை நிறுத்தியதால் அதில் இருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் உயிர் தப்பினர். எனவே தம்பதியை ரெயில்வே அதிகாரிகள், போலீசார் பாராட்டினர். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்