கோவில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலி

நெமிலி அருகே கோவில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-01-22 17:56 GMT

கிரேன் கவிழ்ந்து விபத்து

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா கீழ்வீதி கிராமத்தில் மண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மயிலார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் அலகு குத்தி கிரேனில் தொங்கியவாறு சென்று அம்மனுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கிரேனில் ஒரே நேரத்தில் 7-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தொங்கியபடி சென்றனர்.

அம்மனுக்கு மாலை அணிவிப்பதற்காக கிரேனை ஒரு இடத்தில் நிறுத்தினர். ஆனால் மேடுபள்ளமான இடத்தில் கிரேனை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் எதிர்பாராத விதமாக கிரேன் ஒரு பகுதியாக சாய்ந்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தில் கவிழ்ந்தது.

3 பேர் பலி

இதில் அம்மனுக்கு மாலை அணிவிப்பதற்காக கிரேனில் தொங்கியபடி சென்ற கீழ் ஆவதம் பகுதியை சேர்ந்த ஜோதிபாபு (19), மற்றும் கூட்டத்தில் நின்றிருந்த கீழ் வீதி பகுதியை சேர்ந்த முத்துகுமார் (வயது 39). கீழ் ஆவதம் பகுதியை சேர்ந்த பூபாலன் (40) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் சுமார் 8-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை புன்னை மருத்துவமனைக்கும், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதில் திருத்தணி பகுதியை சேர்ந்த கதிர் (19) மற்றும் பெரப்பேரி பகுதியை சேர்ந்த சின்னசாமி (85) ஆகியோருக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவின் போது விபத்து ஏற்பட்டது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியது.

Tags:    

மேலும் செய்திகள்