தொழிலாளர்களின் ஓவர் டைம் நேரத்தை கூடுதலாக்க வேண்டும்

பின்னலாடை தொழில் மேம்பாட்டுக்கு தொழிலாளர்களின் ஓவர் டைம் நேரத்தை கூடுதலாக்க வேண்டும் என்று அரசுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-04-09 19:34 GMT

பின்னலாடை தொழில் மேம்பாட்டுக்கு தொழிலாளர்களின் ஓவர் டைம் நேரத்தை கூடுதலாக்க வேண்டும் என்று அரசுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதிய ஜவுளி கொள்கை

தமிழக ஜவுளித்துறை ஆணையகம் சார்பில் புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக்கொள்கை உருவாக்குவது தொடர்பாக ஜவுளி தொழில்துறையினர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் அரசு துணி நூல்துறை ஆணையாளர் வள்ளலார் தலைமையில் நடந்தது. இதில் ஜவுளி தொழில்துறையினர், பனியன் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு ஜவுளிக்கொள்கை-2019 குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தொழிலாளர்களின் ஓவர்டைம் வேலைநேரத்தை உயர்த்துவது, டப் திட்டத்தில் முதலீட்டு மானியத்தை அதிகப்படுத்துவது, திருப்பூரில் உள்ள பனியன் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள், ஆராய்ச்சி மையம், நிலையான மானியம் உள்ளிட்டவை செயல்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது. திருப்பூரில் உள்ள 90 சதவீத சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது.

ஓவர் டைம்

கூட்டம் குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-

பின்னலாடை நிறுவன தொழிலாளர்கள் ஓவர்டைம் வேலை பார்த்து கூடுதல் வருவாய் ஈட்டுவதை விரும்புகிறார்கள். கூடுதல் நேரம் வேலை செய்ய தொழிலாளர்கள் தயாராக இருந்தாலும், உரிமையாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்தாலும், சட்டவிதிகள் முட்டுக்கட்டையாக உள்ளன. ஒரு காலாண்டில் 75 மணி நேரம் ஓவர் டைம் பார்க்க அனுமதிக்கப்படுகிறது. உற்பத்தியை உரிய நேரத்தில் முடிக்கவும், தொழிலாளர் கூடுதல் வருமானம் பெறுவதற்கு வசதியாக ஓவர்டைம் நேரத்தை 115 மணி நேரமாக அனுமதிக்க வேண்டும். மராட்டிய மாநிலத்தில் இந்த நடைமுறை 2015-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளதால் தமிழக அரசு சிறப்புகவனம் செலுத்தி அமல்படுத்த வேண்டும்.

ஆராய்ச்சி மையம்

தமிழக அரசின் போக்குவரத்து கழகம், தொழிலாளர் வந்து செல்லும் வழித்தடங்களை கணக்கிட்டு, காலை, மாலை நேரத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கினால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், தொழில்துறையினரின் செலவுகளும் கட்டுக்குள் வரும். பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்த திருப்பூரில் ஆய்வுக்கூடம் அமைக்கவேண்டும்.

செயற்கை நூலிழை ஆடைஉற்பத்தி, உப்பு குறைவாக பயன்படுத்தி சாயமிடுவது, உப்பு இல்லாமல் சாயமிடுவது போன்ற தொழில்நுட்பங்களை கண்டறிய ஆராய்ச்சி மையம் வேண்டும். மத்திய அரசின் சலுகை பெறுவோருக்கு மாநில அரசின் சலுகை கிடைப்பதில்லை. மற்ற மாநிலங்களில் இரு அரசுகளும் சலுகை வழங்குகிறது. திருப்பூரில் தொழில் துறையினருக்கும் மத்திய, மாநில அரசுகளின் சலுகை கிடைக்கச் செய்ய வேண்டும்.

ஜவுளி கண்காட்சி

சர்வதேச ஜவுளி கண்காட்சியில் திருப்பூர் உற்பத்தியாளர்கள் பங்கேற்றால் மட்டுமே புதிய வாய்ப்புகளை வசப்படுத்த முடியும். சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின் கட்டண சலுகை, வட்டியில்லா கடன் வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்