உடுமலை அருகே உள்ள பெரியகுளத்திற்கு காட்டாற்று தண்ணீர் வருவதால், அந்த குளத்தில் இருந்து ஒட்டுக்குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஏழுகுளம் பாசனப் பகுதி
உடுமலையில் இருந்து திருமூர்த்தி அணைவரை உள்ள பகுதிகளில் ஏழுகுளம் என்று அழைக்கப்படும் குளங்கள் அடுத்தடுத்து உள்ளன.பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்தில் (பி.ஏ.பி) உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்கால் மூலம் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக இந்த குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். மொத்தம் ஏழுகுளங்களுடன் இந்த திட்டத்திற்குட்பட்ட மேலும் 2 குளங்கள் என மொத்தம் 9 குளங்களுக்கு தண்ணீர் விடப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் தண்ணீர் திறக்கப்படும். இந்த குளங்களுக்கு எவ்வளவு தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்படவேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்படுமோ அந்த அளவிற்கான தண்ணீர், விவசாயிகளின் தேவையைப்பொறுத்து அவ்வப்போது, அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் திறந்து விடப்படும். அதன்படி திறந்து விடப்பட்ட தண்ணீர், தற்போது கடந்த சில நாட்களாக மழை செய்து வந்ததால் நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மழை பெய்து வந்ததால், விவசாயிகளுக்கு தற்போது குளத்து தண்ணீர் தேவைப்படாது என்பதால் குளங்களில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
ஒட்டுக்குளத்திற்கு தண்ணீர் திறப்பு
இந்த குளங்களில் போடிபட்டி அண்ணா நகரை அடுத்து தளிசாலையில் இருந்து பிரிந்து வாளவாடி கிராமத்திற்குசெல்லும் சாலைபகுதியில் உள்ளது பெரியகுளம்.ஏழுகுளம் என்று அழைக்கப்படுவதில் அதிக உயரமும், அதிக அளவு தண்ணீர் கொள்ளளவும் கொண்ட குளம் இந்த குளம்தான். இந்த குளத்தின் மொத்த உயரம் 11.55 அடி. நேற்று இந்த குளத்தில் நீர் மட்ட உயரம் 10.30 அடியாக இருந்தது. இது இந்த குளத்தின் மொத்த தண்ணீர் கொள்ளளவில் 87.58 சதவீதமாகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் காட்டாற்று வெள்ளம் இந்த குளத்திற்கு வந்து கொண்டுள்ளது.
மீண்டும் பலத்த மழை பெய்தால் கூடுதலாக வரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த குளத்தில் இருந்து தண்ணீர், இந்த குளத்தை அடுத்துள்ள ஒட்டுக்குளத்திற்கு நேற்று முன்தினம் முதல் திறந்து விடப்பட்டுள்ளது. ஒட்டுக்குளத்திற்கும் காட்டாற்று தண்ணீர் வந்து கொண்டுள்ளதால் ஏற்கனவே இந்த குளத்தில் இருந்து ராஜவாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஒட்டுக்குளத்தில் இருந்து ராஜவாய்க்காலில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் உப்பாறு அணைக்கு சென்று சேர்கிறது.
குளங்களில் நீர் மட்டம்
மற்ற குளங்களில் நேற்று இருப்பு இருந்த தண்ணீர் அளவு வருமாறு:-
10 அடி உயரம் கொண்ட ஒட்டுக்குளத்தில் 8.20 அடி உயரத்திற்கு தண்ணீரும், 10 அடி உயரம் 12.74 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செங்குளத்தில் 6.20 அடி உயரத்திற்கு தண்ணீரும், 7.5அடி உயரம் கொள்ளளவு கொண்ட செட்டி குளத்தில் 5.60 அடி உயரத்திற்கு தண்ணீரும், 7.65 அடி உயரம் கொள்ளளவு கொண்ட கரிசல் குளத்தில் 7.40 அடி உயரத்திற்கு தண்ணீரும், 9.25 அடி உயரம் கொள்ளளவு கொண்ட தினைக்குளத்தில் 6.90 அடி உயரத்திற்கு தண்ணீரும், 4.50 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அம்மாபட்டி குளத்தில் 4 அடிஉயரத்திற்கு தண்ணீரும், 10.33 அடி உயரம் கொள்ளளவு கொண்ட வளையபாளையம் குளத்தில் 9.50 அடி உயரத்திற்கு தண்ணீரும் இருந்தது.
திருமூர்த்தி அணையில் இருந்து இந்த குளங்களுக்குதண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டிருந்தாலும், மழையினால் காட்டாறுகள் மூலமாக தண்ணீர் வருவதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.