தமிழ் மொழியை வளர்க்கும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும்

தமிழ் மொழியை வளர்க்கும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று திண்டுக்கல்லில் நடந்த கருத்தரங்கில் கலெக்டர் விசாகன் பேசினார்.

Update: 2023-02-02 17:01 GMT

ஆட்சி மொழி கருத்தரங்கு

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சிமொழி கருத்தரங்கு 2 நாட்கள் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற நிறைவு விழாவுக்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். மேலும் 2020-ம் ஆண்டு ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு கேடயம் வழங்கினார்.

அதேபோல் 2021-ம் ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருது பெற்ற சின்னாளப்பட்டி தமிழ் அமிழ்து அறக்கட்டளை செயலாளர் துரை.தில்லானுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். மேலும் கலெக்டர் விசாகன் பேசியதாவது:-

தமிழை வளர்க்க வேண்டும்

தாய் மொழியாம் தமிழ் மொழியில் எழுத பயிற்சியளிக்க வேண்டிய சூழல் உள்ளது. தமிழ் இனிது, தமிழ் அமிழ்து என்று கூறும் நாம், ஆங்கிலம் கலந்து பேசும் நிலை இருக்கிறது. அரசு அலுவலக கோப்புகளை தமிழ் மொழியில் பராமரிக்க வேண்டும். தமிழ் மொழியில் கையெழுத்திட வேண்டும். பாரதியார் கூறியதுபோல் தமிழ் மிகவும் இனிமையான தொன்மையான மொழியாகும்.

நமது செயல்பாடுகள் தமிழ் மொழியை வளர்க்கும் வகையில் அமைய வேண்டும். அனைத்து அலுவலர்களும் தமிழ் மொழியிலேயே கையெழுத்திட வேண்டும். தமிழ் மொழியில் நமது பழக்க வழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி கலெக்டர் பிரியங்கா, தமிழ்வளர்ச்சித் துறை முன்னாள் துணை இயக்குனர் சந்திரா, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் இளங்கோ, மாவட்ட கருவூல அலுவலர் செல்லையா ராஜசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்