குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு

ஆசிரியர் தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.;

Update:2022-07-20 01:12 IST

அருப்புக்கோட்டை,

ஆசிரியர் தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

ஆசிரியர் தம்பதி

அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகர் வடக்கு 2-வது தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் (வயது 72). இவருடைய மனைவி ஜோதிமணி (65). ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதியர்களான இவர்கள் மகன் சதீஷ் சென்னையில் உள்ள நிலையில் தனியாக வசித்து வந்தனர்.

இதனை கொள்ளை கும்பல் நோட்டம் விட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சங்கரபாண்டியன் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளை கும்பல் தம்பதியை கழுத்தை அறுத்தும், தலையில் அடித்தும் கொலை செய்துள்ளனர். மேலும் ஜோதிமணி அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தடயம் எதுவும் தெரியாமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பி சென்றதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

7 தனிப்படைகள்

இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக ஜோதிமணியின் சகோதரர் முருகேசன் (58) டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக ஐ.ஜி. அஸ்ராகார்க் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமையில் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு 1, துணை போலீஸ் சூப்பிரண்டு 5, இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 2 பகுப்பாய்வு குழுக்கள் உள்ளிட்ட 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தும், சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை வைத்தும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்