நீலகிரியில் 42 மண்டல குழுக்கள் அமைப்பு
தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள நீலகிரியில் 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
குன்னூர்
தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள நீலகிரியில் 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
வளர்ச்சி பணிகள்
நீலகிரி மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் உள்ள பேரூராட்சிகள் துறை சார்பில், குன்னூர் அருகே ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட பந்துமை முதல் ரேலியா அணை வரை ரூ.58 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சாலை, பந்துமையில் ரூ.4 லட்சத்தில் வெள்ள தடுப்புச்சுவர், அருவங்காடு ஒசட்டியில் ரூ.12 லட்சத்தில் அங்கன்வாடி மையம், காரக்கொரையில் ரூ.10 லட்சத்தில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி என மொத்தம் ரூ.84 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரியில் கடந்த ஆண்டு 239 மி.மீ. மழையும், நடப்பாண்டில் இதுவரை 264.2 மி.மீ. மழையும் பெய்து உள்ளது. 6 தாலுகாக்களில் துணை ஆட்சியர் நிலையில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகளை கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
பாதிப்பு இல்லை
மாவட்டம் முழுவதும் 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. நீலகிரியில் 3,600 முதல்நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். 200 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களும் தயார் நிலையில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீலகிரிக்கு வருகை தந்து 2 குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
மழை தொடங்குவற்கு முன்பாகவே கூடலூர், ஊட்டியில் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டதால், மழையால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. நெடுஞ்சாலைத்துறை சார்பில் 12,000 மணல் மூட்டைகள், தீயணைப்புத்துறை மூலம் பவர்ஷா கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அணையில் ஆய்வு
கிளன்மார்கன் அணை பகுதியில் படகு இல்லம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். இதில் குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷணகுமார், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) இப்ரஹீம்ஷா, ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம், துணைத்தலைவர் ஜெய்சங்கர், உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியன், கோத்தகிரி தாசில்தார் கோமதி, ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம், இளநிலை பொறியாளர் வின்சென்ட், கவுன்சிலர் சுகுணாம்பாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.