பரமத்தி வட்டாரத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க திட்டம்

Update: 2023-06-17 18:45 GMT

பரமத்திவேலூர்

பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீடித்த வேளாண்மைக்கான தேசியத்திட்டம் என்.எம்.எஸ்.ஏ. என்ற மிகப்பெரிய திட்டத்தின் உள்ளடக்கிய ஒரு விரிவான பகுதியே பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டம் பி.கே.வி.ஒய். என்பதாகும். மண்ணில் ஆரோக்கியத்தை பேணுவது பற்றியது இத்திட்டம். இந்த திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது. இயற்கை வேளாண்மையில் ஈடுபடக்கூடிய கிராமங்களை தத்தெடுத்து அவற்றை ஒரு தொகுப்பாக அணுகியும், விவசாயி-அரசு இ-சேவை அல்லாத மூன்றாவது ஒரு அமைப்பிடமிருந்து சான்றினைப் பெற்றும் இயற்கை வேளாண்மை வளர்ச்சிக்கு ஊக்கம் தரப்படுகிறது. வேளாண் விளைபொருள்கள் பூச்சிக்கொல்லி மருந்துப்படிவுகள் இல்லாதவையாக, நுகர்வோரின் உடல்நலத்தை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும்.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து வணிகர்களுக்கு சாத்தியப்பாடுள்ள சந்தையை இது உருவாக்கும். இயற்கை வளங்களைத் திரட்டி இடுபொருள்களை உருவாக்க விவசாயிகளை ஊக்குவிக்கும். இத்திட்டம் நமது பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் தொடர்பான தகவல்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது உழவன் செயலியில் பதிவு செய்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்