மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

Update: 2023-05-27 19:30 GMT

கோவை,

கோவை அரசு ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதன்மூலம் 3 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

விபத்தில் மூளைச்சாவு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 24-ந் தேதி மாலை 7 மணியளவில் கள்ளிப்பாளையம்-வாகராயம்பாளையம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்தநிலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார்.

3 பேருக்கு மறுவாழ்வு

இதுகுறித்து பிரபுவின் உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் பிரபுவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். இதைத்தொடர்ந்து பிரபுவின் உடலில் இருந்து கல்லீரல், 2 சிறுநீரகங்களை டாக்டர்கள் குழுவினர் எடுத்தனர்.

இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறும்போது, விபத்தில் மூளைச்சாவு அடைந்த பிரபுவின் உடல் உறுப்புகள் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தானமாக பெறப்பட்டது. அதில் ஒரு சிறுநீகரம் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு ஆஸ்பத்திரி நோயாளிக்கும், கல்லீரல் கோவை தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெறுகின்றனர். பிரபுவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்த உறவினர்களுக்கு நன்றி என்றார். கடந்த வாரம் இதுபோன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் ஒருவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்