மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த மதுரை பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. அதில் ஒரு சிறுநீரகம், நெல்லைக்கு ஆம்புலன்சு மூலம் போலீசார் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2023-04-02 20:40 GMT

மதுரை,

மதுரை மாவட்டம் தேனூர் பகுதியை சேர்ந்தவர் செபஸ்டின். இவருடைய மனைவி கார்த்திகா(வயது 47). இவர் கடந்த 30-ந்தேதி மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். தேனூர் பஸ் நிலையம் அருகே அவர்கள் வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில், கார்த்திகா பலத்த காயம் அடைந்தார்.

இதனைத்தொடர்ந்து அவர், சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து, மூளைச்சாவு அடைந்த கார்த்திகாவின் உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து டாக்டர்கள், அவரின் மகள் மற்றும் மகன்களிடம் எடுத்துரைத்தனர். அதன்பின்னர், அவர்களும் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் ஆலோசனையின் பேரில் மருத்துவ குழுவினர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைப்பு

அதன்படி, கல்லீரல் மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கும், ஒரு சிறுநீரகம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு சிறுநீரகம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கும், கருவிழி, தோல் மற்றும் எலும்பு ஆகியவை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்பின்னர், அந்த உடல் உறுப்புகள் சாலை மார்க்கமாக கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் ஆம்புலன்சுகள் இடையூறு இன்றி செல்லும் வகையில், வழிவகை செய்து கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்