மூளைச்சாவு அடைந்த முன்னாள் ராணுவ வீரரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த முன்னாள் ராணுவ வீரரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.;

Update: 2023-08-17 18:05 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியை சேர்ந்தவர் டோமினிக் பிரபாகரன் (வயது 44). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சங்கீதா குப்பாச்சிப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். ராணுவத்தில் இருந்து கடந்த 2016-ம் ஆண்டு ஓய்வு பெற்ற டோமினிக் பிரபாகரன் திருச்சி துவாக்குடி பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.

விவசாய பணிகளை மேற்கொள்ள இவர் குளித்தலையில் இருந்து துவாக்குடிக்கு சென்று வருவது வழக்கமாம். இந்தநிலையில் கடந்த 15-ந்தேதி துவாக்குடிக்கு டோமினிக் பிரபாகரன் மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு துவாக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற அவரது உறவினர்கள், டோமினிக் பிரபாகரனை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டார் என கூறியுள்ளனர்.

இதையடுத்து டோமினிக் பிரபாகரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சங்கீதா, மகன்கள், உறவினர்கள் முடிவு செய்து டாக்டர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மூளைச்சாவடைந்த டோமினிக் பிரபாகரனின் சிறுநீரகம், இதயம், கல்லீரல் ஆகிய உறுப்புகள் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தானமாக கொடுப்பதற்காக திருச்சியில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்