விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு
போலீஸ் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வாலிபர் உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.;
சென்னை ஓட்டேரி மங்களபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 20). அதே பகுதியைச் சேர்ந்த ரெயில்வே ஊழியர் பாலகிருஷ்ணமூர்த்தியின் கார் கண்ணாடியை உடைத்தது தொடர்பாக ஓட்டேரி போலீசார், கடந்த 21-ந்தேதி ஆகாசை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர்.
அப்போது ஆகாஷ் குடிபோதையில் இருந்ததால் அவரது அக்காவிடம் எழுதி வாங்கி மறுநாள் வரும்படி கூறி அவருடன் அனுப்பி வைத்தனர். அதன்பிறகு வீட்டுக்கு வந்த ஆகாஷ், அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு போதை மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்ததாக தெரிகிறது.
இதற்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விசாரணைக்கு அழைத்துச்சென்ற போலீசார் ஆகாசை தாக்கியதால் அவர் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இந்தநிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு சசிதர், இன்ஸ்பெக்டர் சஜிபா ஆகியோர் ஓட்டேரி போலீஸ் நிலையம் சென்று முதல்கட்டமாக விசாரணை நடத்தினர். 20-ந்தேதி ஆகாஷ் மீது கொடுக்கப்பட்ட புகார், 21-ந்தேதி வழக்கு விசாரணைக்கு அவர் அழைத்து வரப்பட்ட விபரம் மற்றும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவுகளை ஆய்வு செய்து சென்றனர்.