116 மாணவர்களுக்கு ஊக்கத்தொகைக்காக ஆணை-சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
கூடங்குளத்தில் 116 மாணவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்குவதற்கான ஆணைகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
வள்ளியூர்:
கூடங்குளத்தில் 116 மாணவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்குவதற்கான ஆணைகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
கூடங்குளம் அணுமின் நிலைய சமூகநலத் திட்டத்தின்கீழ் நடமாடும் மருத்துவ மைய சேவை தொடக்க விழா, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்குவதற்கான ஆணை வழங்கும் விழா, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா கூடங்குளத்தில் நடந்தது.
மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் பிரேம்குமார் முன்னிலை வகித்தார். அணுமின் நிலைய சமூக மேம்பாட்டு திட்ட அலுவலர் ஆபிரகாம் ஜேக்கப் வரவேற்று பேசினார்.
சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நடமாடும் மருத்துவ மைய சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 116 பேருக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற 85 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
கல்வியில் சிறந்த தமிழகம்
பெண்களின் கல்விக்காக தமிழக அரசு அதிக முக்கியத்துவம் வழங்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் தேசிய அளவில் பட்டப்படிப்பு படித்தவர்களின் சராசரி 34 சதவீதமாக இருந்தபோதிலும், தமிழகத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களின் சராசரி 51.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சிக்கு உதாரணம்.
கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி. இந்தியாவிலேயே முதன் முதலாக தோன்றிய மொழி தமிழ் என்று பிரகடனப்படுத்தியவர் பிஷப் கால்டுவெல். தமிழ் மொழிக்கு இலங்கை, சிங்கப்பூர், கனடா, மலேசியா உள்ளிட்ட 9 நாடுகளில் ஆட்சிமொழி அந்தஸ்து கிடைத்துள்ளது.
ஸ்மார்ட் வகுப்புகள்
ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நிதி வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க, 80 பள்ளிகளில் அணுமின் நிலைய சமூகநல திட்டத்தில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க அனுமதி தந்துள்ளனர். மேலும் 120 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க தலைமையிடத்துக்கு கோப்புகளை அனுப்பி உள்ளதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட தாமஸ் மண்டபம் அருகில் சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்
பின்னர் கூடங்குளம் துணை சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார். தொடர்ந்து கூடங்குளம் கிராமத்தில் அணுமின் திட்ட சமூக மேம்பாட்டு திட்டத்தின்கீழ் இசக்கியம்மன் கோவில் முதல் மருதக்குளம் வரை நடைபெற்று வரும் வாறுகால் பணிகளை சீரமைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் துறை அதிகாரிகளுடன் களஆய்வு மேற்கொண்டார்.
சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், கூடங்குளம் அணுமின் நிலைய 3, 4-வது அணு உலைக்கான திட்ட இயக்குனர் சின்னவீரன், 5, 6-வது அணு உலைக்கான திட்ட இயக்குனர் சுரேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, ராதாபுரம் தாசில்தார் வள்ளிநாயகம், கூடங்குளம் பஞ்சாயத்து தலைவர் வின்சி மணியரசு, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். அணுமின் நிலைய சமூக மேம்பாட்டு திட்ட துணைத்தலைவர் பண்டாரம் நன்றி கூறினார்.