பாமாயில், பருப்பு கொள்முதல் செய்ய வழங்கப்பட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பதுடன், பாமாயில், பருப்பு கொள்முதல் செய்ய வழங்கப்பட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-10-02 18:42 GMT

சென்னை,

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை விநியோகித்தது தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்ட 3 நிறுவனங்களுக்கு, பொது விநியோகத் திட்டத்துக்காக 4 கோடி எண்ணிக்கையில் ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட் விநியோகிப்பதற்கும், ஒரு லட்சம் டன் பருப்பு வழங்குவதற்கும் ஆணை வழங்கப்பட்டிருக்கிறது.

அதாவது, தரமற்ற பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் செயலில் தி.மு.க. அரசு ஈடுபட்டிருப்பது என்பது தெள்ளத் தெளிவாகிறது. உண்மையிலேயே இந்த அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருக்குமானால் முதல்-அமைச்சர் அறிவுறுத்தியபடி, மேற்படி நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும். ஏன் சேர்க்கவில்லை?, என்ன தயக்கம்?.

கடும் கண்டனம்

தரமற்ற பொருட்களை விநியோகித்த நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்காததோடு, அந்த நிறுவனங்களுக்கு புதிதாக ஒப்பந்த ஆணைகளை வழங்கி அவற்றை நியாயப்படுத்தி பேசுவது என்பது உலகில் எங்கும் கண்டிராத ஒன்று.

இதுபோன்ற முறைகேடான, நியாயமற்ற, மக்கள் விரோதமான செயல்களில் ஈடுபடுவதுதான் 'திராவிட மாடல்' போலும். ஊழலை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கும் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆணையை ரத்து செய்ய வேண்டும்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்குரிய விளக்கத்தினை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்றும், தரமான பொருட்களை மக்களுக்கு விநியோகிக்கும் வகையில், வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற நேர்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், மேற்படி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையினை ரத்து செய்ய வேண்டும் என்றும்அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்