மோசடியாக பதிவு செய்து இயக்கப்படும் பிஎஸ் 4 ரக வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு

மோசடியாக பதிவு செய்து தமிழ்நாட்டில் இயக்கப்படும் பிஎஸ் 4 ரக வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-05-20 18:43 GMT

சென்னை,

சேலத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "என்னுடைய சொகுசு காரை கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வட்டார போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்துள்ளார். இந்த காரை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.அருண் ஆஜராகி, "2020-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்கு பிறகு பிஎஸ் 4 ரக வாகனங்களை விற்பனை செய்யவோ, அதை பதிவு செய்யவோ கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதையும் மீறி பலர் வாகனங்களை பதிவு செய்துள்ளனர். மனுதாரர் காரை யாரிடம், எப்போது வாங்கினார் என்ற விவரங்களை தெரிவிக்கவும், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவும் மறுக்கிறார். அவரிடம் காரை ஒப்படைக்கூடாது" என்று வாதிட்டார்.

மிகப்பெரிய மோசடி

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், "மனுதாரர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளார். அவர் யாரிடம் கார் வாங்கினார் என்ற விவரங்களை வழங்குவார். அந்த காரை ஒப்படைக்கும்போது, அதை வீட்டில் நிறுத்தி மனுதாரர் பராமரிப்பார்" என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

போலி ஆவணங்கள் மூலம் வட்டார அலுவலகத்தில் பதிவு செய்து, பிஎஸ் 4 ரக வாகனங்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்து மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளின் தொடர்பில்லாமல், இந்த மோசடி நடைபெற வாய்ப்பு இல்லை. இந்த அதிகாரிகளின் ஆதரவு இல்லாமல் இந்த வகையான வாகனங்களை பதிவும் செய்ய முடியாது.

உத்தரவாதம்

எனவே, இதுகுறித்து விரிவான புலன் விசாரணை நடத்துவது அவசியமாகுகிறது. அதேநேரம், மனுதாரரின் காரை வட்டார போக்குவரத்து அலுவலரின் அலுவலகத்தில் நிறுத்துவதற்கு அனுமதித்தால், வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, விரைவில் அந்த கார் பழைய இரும்பு கடைக்கு போட வேண்டிய நிலைக்கு வந்துவிடும்.எனவே, இந்த காரை ஓட்ட மாட்டேன். வீட்டில்தான் நிறுத்தியிருப்பேன் என்று மனுதாரர் உத்தரவாதம் அளித்து, அந்த காரை பெற்றுக்கொள்ளலாம். இந்த மோசடி குறித்த விசாரணைக்கு மனுதாரர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சட்டப்படி நடவடிக்கை

இந்த மோசடி குறித்து போக்குவரத்துத்துறை ஆணையர், தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு, புகார் செய்ய வேண்டும். மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் விவரங்களையும் அளிக்க வேண்டும். இதனடிப்படையில், இரு துறை அதிகாரிகளும் இணைந்து, இந்த மோசடி குறித்து விசாரித்து, குற்றவாளிகளை அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோசடியாக பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் பிஎஸ் 4 ரக வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டும். இதுகுறித்து அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்