500 முதியவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெற ஆணை-சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
நெல்லையில் 500 முதியவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெற ஆணைகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
நெல்லையில் 500 முதியவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெற ஆணைகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
முதியோர் ஓய்வூதியம்
தமிழக அரசு 2 ஆண்டு சாதனையை முன்னிட்டு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் விழா நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சுகன்யா வரவேற்று பேசினார். ஞானதிரவியம் எம்.பி., நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
சபாநாயகர் வழங்கினார்
இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 500 முதியோருக்கு அதற்குரிய ஆணைகளை வழங்கினார். மேலும் சமீபத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த அம்பை பகுதியை சேர்ந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலைகளையும் அவர் வழங்கினார்.
அப்போது சபாநாயகர் அப்பாவு பேசுகையில் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று 2 ஆண்டு ஆட்சியில் சாமானிய மக்களுக்கு நல்ல பல திட்டங்களை தந்து உள்ளார். அதில் ஒரு பகுதியாக 500 முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ஈராண்டு சாதனை
பெண்கள் டவுன் பஸ்களில் கட்டணம் இல்லாமல் பயணிக்க உத்தரவிட்டார். இதுவரை தமிழக பெண்கள் ரூ.277 கோடிக்கு பயணம் செய்துள்ளனர். இந்த அரசு பொறுப்பேற்றபோது 4.38 லட்சம் பேர் பல்வேறு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து, அவை முடங்கி கிடந்தன. அதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் மூலம் சான்றுகள் வழங்கலாம் என்று உத்தரவிட்டு தற்போது ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் கடந்த காலங்களில் உதவித்தொகை பெற்று வந்தவர்கள் தகுதியற்றவர்கள் என்று கூறி 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலெக்டர்கள் மூலம் விசாரணை நடத்தி 1.38 லட்சம் பேர் தகுதியானவர்கள் என்று உறுதி செய்து மீண்டும் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் கொரோனா காலத்தில் ரேஷன் அட்டைக்கு ரூ.4 ஆயிரம், பெண் உயர் கல்வி தொடர கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000, ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் போன்ற பல திட்டங்களை ஈராண்டு ஆட்சியில் முதல்-அமைச்சர் தந்து உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் இசக்கி பாண்டியன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சமூக பாதுகாப்பு திட்ட தனி உதவி கலெக்டர் குமாரதாஸ் நன்றி கூறினார்.