கிருஷ்ணகிரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 335 பேருக்கு பணி நியமன ஆணைகலெக்டர் சரயு வழங்கினார்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 335 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் சரயு வழங்கினார்.
வேலைவாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். செல்லகுமார் எம்.பி., மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டைட்டான், டாடா எலக்ட்ரானிக்ஸ், டெல்டா, ஓலா மற்றும் செய்யாறு காலணி தயாரிப்பு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் 2021-22 ம் ஆண்டு 14 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமும், 2022-23 ஆண்டு 24 தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் என மொத்தம் 38 முகாம்களின் மூலம் மொத்தம் 6,418 நபர்கள் பணிநியமனம் பெற்றுள்ளனர் என்று பேசினார்.
பணி நியமன ஆணைகள்
நேற்றைய முகாமில் 2,238 பேர் கலந்து கொண்டனர். அதில் 335 பேருக்கு நிறுவனங்கள் சார்பில் பணி நியமன ஆணைகளை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் மணிமேகலை நாகராஜ், வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் லதா, தொழில் பாதுகாப்பு இணை இயக்குனர் சபீனா பானு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், திறன் மேம்பாட்டு உதவி இயக்குனர் பன்னீர்செல்வம், நகராட்சி தலைவர் பரிதா நவாப், துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.