விபத்து வழக்கில் சாட்சி சொல்ல வராத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு-நாமக்கல் கோர்ட்டு உத்தரவு
விபத்து வழக்கில் சாட்சி சொல்ல வராத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நாமக்கல் கோர்ட்டு உத்தரவிட்டது.
நாமக்கல்:
நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் கடந்த 2019-ம் ஆண்டு நாமக்கல் பொன்நகர் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது தனியார் பஸ் மோதியதில் இறந்து விட்டார். இந்த விபத்து தொடர்பாக அப்போது நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பொன்.செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஜராகி சாட்சி சொல்ல தற்போது விழுப்புரத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் பொன்.செல்வராஜுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் சாட்சி சொல்லவரவில்லை. எனவே நேற்று மாஜிஸ்திரேட்டு செல்வராஜ், இன்ஸ்பெக்டர் பொன்.செல்வராஜிக்கு பிடிவாரண்டு பிறப்பித்தார்.