திராவிட இயக்க தலைவர்களின் பெயரை கவர்னர் சொல்லாதது வேதனை அளிக்கிறது- ஈரோட்டில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி பேட்டி

திராவிட இயக்க தலைவர்களின் பெயரை கவர்னர் சொல்லாதது வேதனை அளிக்கிறது என்று ஈரோட்டில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி கூறினார்.

Update: 2023-01-10 20:51 GMT


திராவிட இயக்க தலைவர்களின் பெயரை கவர்னர் சொல்லாதது வேதனை அளிக்கிறது என்று ஈரோட்டில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி கூறினார்.

வேதனை

ஈரோட்டில் மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தான் வெளிநடப்பு செய்வார்கள். ஆனால் முதல் முறையாக கவர்னர் வெளிநடப்பு செய்திருக்கிறார். மக்களுக்கு பயனுள்ள வகையில் கவர்னர் அறிக்கை இருக்க வேண்டும். திராவிட இயக்க தலைவர்களின் பெயரை அவர் சொல்லாதது வேதனை அளிக்கிறது. கவர்னருக்கும், அரசுக்கும் தகராறு நீண்டு கொண்டே சென்றால் இதன் முடிவு எங்கே செல்வது என்று தெரியாது. சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் அருகில் உட்கார முடியாது என்று எடப்பாடி பழனிசாமி பிரச்சினை செய்தார். ஆனால் கூட்டத்தொடரில் அவருக்கு அருகில் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார்.

காழ்ப்புணர்ச்சி

கொடநாடு என்ற பேச்சை முதல்-அமைச்சர் எடுத்ததும் எடப்பாடி பழனிசாமி எழுந்து வெளியே சென்றுவிட்டார்.

கவர்னர் பேச்சு தொடர்பாக பேச்சு நடக்கும்போது கொடநாடு பிரச்சினையை ஏன் பேசுகிறீர்கள் என்று தைரியமாக சட்டசபையில் அவர் கேட்டு இருக்கலாம். அவர் அமைதியாக வெளியேறியது பலருக்கு புரியாது. அதற்கு காரணம் கொலை, கொள்ளை என்று எதைப்பற்றி பேசினாலும் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கக்கூடாது என்பதுதான். அதை நிரூபிக்கும் வகையில் இன்று (அதாவது நேற்று) சபாநாயகரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியை விட்டுவிட்டு செயல்பட்டால் அ.தி.மு.க. எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

சரித்திர தீர்ப்பு

ஜெயலலிதா வகித்த பதவியை வகிக்க மாட்டோம் என கூறி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கினர். இரட்டை தலைமையை கொண்டு வந்தனர். ஆனால் இன்று பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி அடைய துடிக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு கண்களை திறந்து விட்டது. அனைத்து கேள்விகளையும் கேட்டிருக்கிறார்கள். அங்கே ஏமாற்றவே முடியாது.

இந்த தீர்ப்பை பொறுத்தவரை சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக இருக்கும். ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றியாக இது இருக்கும். அ.தி.மு.க. காப்பாற்றப்படும் தீர்ப்பாகவும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்