ஒரே நாடு ஒரே தேர்தலுக்குஆட்சியில் இருந்த போது எதிர்ப்பு, இப்போது ஆதரவுஅ.தி.மு.க. மீது அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆட்சியில் இருந்த போது எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க., இப்போது ஆதரவு தெரிவிப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டினார்.

Update: 2023-09-02 18:45 GMT

நாகர்கோவில், 

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆட்சியில் இருந்த போது எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க., இப்போது ஆதரவு தெரிவிப்பதாக

அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டினார்.

அடிக்கல் நாட்டு விழா

நாகர்கோவில் கோணத்தில் உள்ள தொழிற்பயிற்சி பள்ளி வளாகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி மைய புதிய கட்டிடம் ரூ.2.40 கோடியில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். புதிய கட்டிடத்திற்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிரந்தர கொள்கை இல்லை

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பா.ஜனதா சொல்லி வருகிறது. இதனை அ.தி.மு.க. ஆதரிக்கிறது. அவர்களுக்கு நிரந்தர கொள்கை கிடையாது. ஆட்சியில் இருந்தபோது ஒரே நாடு, ஒரே தேர்தலை அ.தி.மு.க. எதிர்த்தது. ஆனால் இப்போது பா.ஜனதா சொல்வதைக் கேட்டு ஆதரிக்கிறார்கள். பா.ஜனதா வழி நடப்பவர்கள் அ.தி.மு.க.வினர். அதனால் அ.தி.மு.க.வை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

நேர்மையான கட்சி, நேர்மையான ஆட்சி என்று பா.ஜனதா கூறி வந்தது. தற்போது மத்திய அரசின் சி.ஏ.ஜி. அறிக்கையில் ரூ.7 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் சி.ஏ.ஜி. அறிக்கை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பா.ஜனதா கூறுகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2ஜி விவகாரத்தில் சி.ஏ.ஜி. அறிக்கையை வைத்து தான் பா.ஜனதாவினர் பெரிதாக பிரசாரம் செய்தனர். அது மிகப்பெரிய ஊழல் என்றனர். தற்போது அவர்களுக்கு வந்தவுடன் அதில் ஒன்றுமில்லை என்று கூறுகிறார்கள். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இந்த ஊழல் குறித்து பதில் கூற வேண்டும்.

பால் கொள்முதல்

பால் கொள்முதல் முறையாக நடைபெற்று வருகிறது. பால் கொள்முதலை அதிகரிக்க பால்வளத்துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெள்ளைசாமி ராஜ், உதவி செயற்பொறியாளர் அனிஸ், உதவி பொறியாளர் மாரித்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்