இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த எதிர்ப்பு: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் புகுந்து வாக்குவாதம்-சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் புகுந்து அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டதால் எடப்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.
எடப்பாடி:
ஆதரவாளர்கள் கூட்டம்
சேலம் மேற்கு மாவட்ட ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை எடப்பாடியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ்பாண்டியன், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்ட ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய பி.ஏ.ராஜேந்திரன் என்பவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசினார். அப்போது எடப்பாடி நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் சிலர் அந்த மண்டபத்துக்குள் புகுந்தனர். அவர்கள் கூட்டத்தில் இரட்டை சிலை சின்னம், அ.தி.மு.க. கொடி ஆகியவற்றை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற தொடங்கினர். இதனால் அ.தி.மு.க.வினருக்கும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சாலை மறியல்
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர். மேலும் அ.தி.மு.க.வினரை பேனரை அகற்றவிடாமல் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் மண்டபத்தின் முன்பு எடப்பாடி-சேலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சின்னம், கட்சி கொடிகளை அகற்ற வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அவர்களிடம் சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அ.தி.மு.க.வினர் சாலைமறியலை கைவிடவில்லை.
100 பேர் கைது
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க. நகர செயலாளர் முருகன், நகராட்சி கவுன்சிலர்கள் நாராயணன், தனம், மல்லிகா, சுந்தராம்பாள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கட்சியினரை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அப்போது அவர்கள் வாகனத்தில் ஏற மறுத்து கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.
இதையடுத்து ஆதரவாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் முடிவடைந்த நிலையில், ஆதரவாளர்கள் வெளியே வர தொடங்கினர். அப்போது அங்கு திரண்ட அ.தி.மு.க.வினர் சிலர் பெங்களூரு புகழேந்தியின் காரை தாக்க முயன்றனர். இதனால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து இரு தரப்பினரையும் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓமலூர்
ஓமலூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னதாக அ.தி.மு.க. கொடிகள் சாலையோரங்களில் நடப்பட்டன. இதற்கு எம்.எல்.ஏ. மணி தலைமையிலான அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கொடியை அவிழ்க்க முயன்றனர். ஓமலூர் போலீசார் அ.தி.மு.க.வினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.