மதுரை சிறையை தங்கள் ஊருக்கு இடமாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு
மதுரை சிறைச்சாலையை தங்கள் ஊருக்கு இடமாற்றும் முடிவுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது..;
வாடிப்பட்டி,
மதுரை சிறைச்சாலையை தங்கள் ஊருக்கு இடமாற்றும் முடிவுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது..
ஆக்கிரமிப்பு அகற்றம்
மதுரை மாநகரில் அரசரடி அருகே மத்திய சிறைச்சாலை உள்ளது. அதில் 1,500 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இடப்பற்றாக்குறை இருப்பதால் தற்போது மதுரை மத்திய சிறையை புறநகருக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மேலூர் அருகே இடையபட்டியில் சுமார் 85 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அப்பகுதியில் வனவிலங்குகள் அதிகம் உள்ளதால் அங்கு வனப்பல்லுயிர் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்ததால் சிறைச்சாலையை அங்கு இடமாற்றும் முடிவு கைவிடப்பட்டது.
இதை தொடர்ந்து வாடிப்பட்டி அருகே உள்ள தெத்தூர் பகுதியில் சிறைச்சாலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நிலத்தை தேர்வு செய்யும் பணியை தொடங்கியது.
அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறிய அதிகாரிகள், போலீசார் உதவியுடன் பொக்லைன் எந்திரங்களுடன் நேற்று காலை அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் தடுப்பு வேலிகள் உள்ளிட்டவற்றை இடித்தனர்.
வாக்குவாதம்
இதைக்கண்டு அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்து அதிகாரிகள், போலீசாரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கள் ஊருக்கு மதுரை மத்திய சிறையை இடமாற்றும் முடிவை கைவிட வேண்டும் என தெரிவித்தனர்.
அதிகாரிகளின் ஜீப் முன்பு உட்கார்ந்து திடீர் மறியலிலும் ஈடுபட்டனர். அதிகாரிகள், பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்பகுதி மக்கள் கூறும்போது. "நாங்கள் கடந்த 50 ஆண்டு காலமாக விவசாய நிலங்களில் மானாவாரியாக பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறோம். இப்போது சிறைச்சாலை அமைக்க போகிறோம் என எங்களது வாழ்வாதாரத்தை அரசு பறிக்க நினைக்கிறது. இப்பகுதியில் சிறைச்சாலை அமைக்கக்கூடாது" என்றனர்.
பின்னர் அதிகாரிகள் மற்றும் போலீசார், அரசிடம் இதுகுறித்து தெரிவிக்கப்படும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றதால் கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.