ஈத்தாமொழி அருகே கோவில் நிலத்தில் உள்ள குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு; தீக்குளிப்பு போராட்டம் அறிவித்த பொதுமக்களால் பரபரப்பு
ஈத்தாமொழி அருகே கோவில் நிலத்தில் உள்ள குடியிருப்புகளை அகற்றினால் தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜாக்கமங்கலம்,
ஈத்தாமொழி அருகே கோவில் நிலத்தில் உள்ள குடியிருப்புகளை அகற்றினால் தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் நிலத்தில் குடியிருப்புகள்
திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான உச்சிகால வெள்ளி தாம்பாள கட்டளை பெயரில் ஈத்தாமொழி அருகே உள்ள பூச்சிவிளாகம் வத்தக்காவிளை பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் 47 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த சுமார் 60 ஆண்டுகளாக 9 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். மேலும் கடந்த 1992-ம் ஆண்டு பெய்த கனமழையால் பூச்சிவிளாகம் குளக்கரையில் குடியிருந்து வந்த பல குடும்பத்தினர் இந்த பகுதியில் வந்து 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அந்த நிலம் தனக்குதான் உரிமை பட்டது என்று கூறி, அங்கு குடியிருக்கும் 25 குடும்பத்தினரை காலி செய்ய கூறியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து பல மனுக்கள் அனுப்பி வந்துள்ளார்.
தீக்குளிப்பு போராட்டம் அறிவிப்பு
அந்த மனுக்களின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் தங்களது வீட்டை இடித்து அப்புறப்படுத்தினால் ராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தீக்குளிக்க போவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினர்.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் காலை முதல் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ராஜாக்கமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். காலை 10 மணி அளவில் கோவில்கட்டளை நிலத்தில் குடியிருந்து வரும் நடராஜன் (வயது60) என்பவர் தலைமையில் சுமார் 25 குடும்பத்தினர் ராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். மேலும் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.
அதிகாரியிடம் பேச்சுவார்த்தை
தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கு இல்லாததால் போலீசார் ஒரு சிலரை மட்டும் மேலாளர் தமிழ்செல்வியிடம் அழைத்து சென்றனர். அங்கு போலீசார் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
அப்போது பொதுமக்கள், கோவில் நிலத்ை விட்டு காலி செய்யக் கூறுவதால் தாங்களது வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளதாக கூறி மனு அளித்தனர். அதற்கு மேலாளர் தமிழ்ச்செல்வி, இந்த பிரச்சினை தொடர்பாக கோவில் அறக்கட்டளை இணை ஆணையரை சந்தித்து கோரிக்கைகளை முறையிட்டு தீர்வு காணுமாறு கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.