இலங்கை அகதிகளுக்கு குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு: ஆழியாறில் பொதுமக்கள் சாலை மறியல்-சப்-கலெக்டர் தலைமையில் இன்று அமைதி பேச்சுவார்த்தை
இலங்கை அகதிகளுக்கு குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆழியாறில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து சப்-கலெக்டர் தலைமையில் இன்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
பொள்ளாச்சி
இலங்கை அகதிகளுக்கு குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆழியாறில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து சப்-கலெக்டர் தலைமையில் இன்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
சாலை மறியல்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள வீடுகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதை தொடர்ந்து 317 வீடுகள் தலா ரூ.5 லட்சம் செலவில் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் குடியிருப்பு கட்டுவதற்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த இடத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தை ஆழியாறில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் குடியிருப்பு கட்டுவதற்கு அந்த மனமகிழ் மன்றத்தை இடிப்பதற்கு நேற்று அதிகாரிகள் வந்தனர். இதற்கிடையில் மனமகிழ் மன்றத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வால்பாறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆழியாறு போலீசார் விரைந்து வந்தனர். மேலும் ஆனைமலை தாசில்தார் மாரீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் வந்நது பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அமைதி பேச்சுவார்த்தை
அப்போது பொதுமக்கள் ஆழியாறில் உள்ள மனமகிழ் மன்றத்தை கோவில் திருவிழாக்கள், விளையாட்டு போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே அந்த இடத்தில் இலங்கை அகதிகள் மக்களுக்கு குடியிருப்பு கட்ட கூடாது. வருவாய் துறைக்கு சொந்தமான வேறு இடத்தில் குடியிருப்பு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், சப்-கலெக்டர் தலைமையில் நாளை (இன்று) அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக கூட்டம் நடத்தப்படும். கூட்டத்தில் இதுதொடர்பாக பேசி முடிவு எடுக்கலாம் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக வால்பாறை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.