உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு: படகில் சென்று அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் புதிதாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து படகில் சென்று அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.;
வடசென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் கொண்டு செல்வதற்காக கடலும், ஆறும் கலக்கும் எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் புதிதாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த கோபுரங்கள் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் மீன் பிடிக்கும் 8 மீனவ கிராமத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்வதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்,
இந்த நிலையில் நேற்று அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் தலைமையில் உயர்மின் அழுத்த கோபுரம் கட்டுவதை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்களுடன் சென்று கோபுரம் கட்டப்படும் முகத்துவாரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் அங்கு உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களிடம், "எங்களுக்கு தீர்வு காணப்படும் வரை இங்கு பணி செய்யக்கூடாது. அதிகாரிகளை எங்களுடன் பேச சொல்லுங்கள்" என்றனர். ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர் கே.கார்த்திக், 8 கிராம நிர்வாகிகள் மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.