அங்கன்வாடி மையத்தை மூடுவதற்கு எதிர்ப்பு:கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா
அங்கன்வாடி மையத்தை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
கடமலைக்குண்டு அருகே தும்மக்குண்டு ஊராட்சி வண்டியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் கார் நிறுத்தப்படும் இடத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் ஊரில் அங்கன்வாடி மையத்தை மூடுவதற்கு முயற்சி நடப்பதாகவும், தொடர்ந்து செயல்படுத்த வலியுறுத்தியும் இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை. மாவட்ட கலெக்டரிடம் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என்றனர். பின்னர், அவர்கள் மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவை சந்தித்து தங்களின் கோரிக்கையை தெரிவித்து ஒரு மனு கொடுத்தனர்.
அங்கன்வாடி மையம்
அந்த மனுவில், 'எங்கள் கிராமத்தில் அரசு பள்ளி, ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், கோவில்கள், நூலகம் போன்றவை செயல்பட்டு வருகின்றன. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அங்கன்வாடி ஊழியர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கன்வாடி மையத்தை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.
மேலும் அந்த மக்கள், 'அங்கன்வாடி ஊழியர் இடமாற்றம் செய்யப்பட்டதால் அந்த கட்டிடத்தை வனத்துறையினர் இடிக்க முயற்சி செய்கின்றனர். எனவே, அங்கன்வாடி மையத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆர்ப்பாட்டம்
மேலும், கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு-புதுச்சேரி மெய்வழி சட்ட மையம், மெய்வழி மக்கள் இயக்கம் என்ற அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூரில் மருத்துவ சமூக மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். தேனியில் கட்டப்படும் ரெயில்வே மேம்பால முகப்பில் காரல்மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோருக்கு சிலை வைக்க வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் செல்வலட்சுமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.