விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு; எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ. அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-07-22 16:39 GMT

செய்யாறு

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ. அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட்டில் மேல்மா பகுதியில் சிப்காட் விரிவாக்க திட்டத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஞானமுருகன்பூண்டி பகுதியில் இருந்து நகரின் முக்கிய சாலைகள் வழியாக கையில் பதாகைகள் ஏந்தி கோரிக்கைகளை கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்தனர்.

பின்னா் அவர்கள் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதைத்தொடர்ந்து ஒ.ஜோதி எம்.எல்.ஏ.விடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

மேல்மா, தேத்துறை, நர்மாபள்ளம், குரும்பூர், வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், அத்தி, நெடுங்கல், வீரம்பாக்கம், மணிபுரம், காட்டுக்குடிசை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

விட்டு தர மாட்டோம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தமிழக அரசு அறிவித்துள்ள செய்யாறு மேல்மா சிப்காட் திட்டமானது சுமார் 3,200 ஏக்கர் விளை நிலங்களை காவு வாங்கும் திட்டமாகும். 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வை கேள்விகுறியாக்கும் நிலை உள்ளதால் விவசாயிகள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.

மேலும் விவசாய நிலங்களை அழித்து கொண்டு வரும் திட்டத்தை அரசு சாதனை திட்டம் போல் பேசி வருகிறது.

இப்பகுதி விவசாயிகள் எக்காரணம் கொண்டும் இந்த விவசாய அழிவு திட்டத்திற்காக முப்போகம் விளையும் பூமியை விட்டு தர மாட்டோம். எனவே செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தமிழக அரசின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு சென்று இத்திட்டத்தை கைவிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போலீஸ் குவிப்பு

போராட்டத்தில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்