சேவை நிறுவனங்கள் நடத்துபவர்கள் பதிவு செய்ய வேண்டும்
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் சேவை நிறுவனங்கள் நடத்துபவர்கள் பதிவு செய்ய வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சேவைகளை செய்து வரும் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள மாவட்ட கலெக்டர் மகாபாரதி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-ஆதரவற்றோருக்கான இல்லங்களில் உடல் ரீதியான பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளோ அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளோ பராமரிக்கப்பட்டு வந்தால் அத்தகைய இல்லங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016-ன் கீழ் பதிவு செய்ய வேண்டும். இதனைப் போலவே மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு வகையான உதவிகளை வழங்கி அவர்களுக்கு சேவை புரிந்துவரும் தொண்டு நிறுவனங்கள், பயிற்சிகள் நடத்தி வரும் நிறுவனங்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியது கட்டாயமாகும். எனவே, இதுவரை பதிவு செய்யாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் எண்.13, செட்டிகுளச் சந்து, 5-வது புதுத்தெரு, மயிலாடுதுறை என்ற முகவரியில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி அதற்கான விண்ணப்பங்களையும், விபரங்களையும் பெறலாம். மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சேவைகளை செய்து வரும் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் மீது மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் - 2016 ன் படி சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.