பெட்டி கடைக்கு அதிரடி "சீல்"

பெட்டி கடைக்கு அதிரடி "சீல்" வைக்கப்பட்டது.

Update: 2022-12-28 19:00 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கோடங்குடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணிகளை ஆய்வு செய்துவிட்டு கோடங்குடி மாரியம்மன் கோவில் அருகில் கட்டப்பட்டிருந்த சிறு பாலத்தை ஆய்வு செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் சாலையோரமாக கடையில் தான் வாங்கிய புகையிலை பாக்கெட்டை பிரித்துக் கொண்டே நடந்த சென்றதை கலெக்டர் கவனித்து விட்டார். உடனடியாக காரை நிறுத்திவிட்டு, அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தார். அப்போது அருகில் இருந்த ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. புகையிலை பாக்கெட் வாங்கிச் சென்றவரையும் அழைத்துக்கொண்டு அந்த பெட்டிக்கடைக்கு சென்று அதிரடி ஆய்வு செய்தார். அப்போது அந்த கடையில் புகையில் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதனை பறிமுதல் செய்த கலெக்டர் ரமண சரஸ்வதி அந்த கடைக்கு பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார். பின்னர் புகையில் பொருட்கள் வாங்கிச் சென்ற வாலிபரிடம் அறிவுரைகூறி அனுப்பி வைத்தார். அப்பகுதியில் திரண்டு இருந்த மக்களிடம் தமிழ்நாடு முழுவதும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இது போன்று கடைகளில் புகையிலை பொருட்கள் வைத்து விற்பனை செய்வதை அறிந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ அல்லது மாவட்ட கலெக்டரிடமோ தகவல் தெரிவிக்கலாம் என்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்