தொடர் விடுமுறையையொட்டி 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - கும்பகோணம் போக்குவரத்துக்கழகம்
தொடர் விடுமுறையையொட்டி 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக கும்பகோணம் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.;
கும்பகோணம்,
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு வரும் 23ம் தேதி திங்கள்கிழமை மற்றும் 24ம் தேதி செவ்வாய்கிழமை அரசு விடுமுறை தினங்களாகும், இதற்கு முந்தைய தினங்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளாகவும் உள்ளதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினங்களாகும். எனவே மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர்.
இதற்காக ஏற்கனவே சென்னையிலிருந்து 2,265 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்நிலையில் கும்பகோணம் போக்குவரத்து கழகமும் 500 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, 21 முதல் 24ம் தேதி வரை திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு 300 பேருந்துகள் இயக்கப்படும். மேலும் 20 முதல் 22ம் தேதி வரை திருச்சியில் இருந்து கோவை, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
பின்னர் 24, 25 தேதிகளில் சென்னையில் இருந்து 300 பேருந்துகள் ,மேலும் மற்ற வழித்தடங்களில் இருந்து 200 பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.