ஆப்ரேஷன் ஆம்லா கடலோர பாதுகாப்பு ஒத்திகை

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க நாகையில் ஆப்ரேஷன் ஆம்லா என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-06-29 18:45 GMT


தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க நாகையில் ஆப்ரேஷன் ஆம்லா என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

கடலோர பாதுகாப்பு ஒத்திகை

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, மத்திய அரசு கடலோர மாவட்டங்களில் ஆப்ரேஷன் ஆம்லா மற்றும் சாகர் கவாச் உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகிறது. ஆண்டுக்கு 2 முறை இந்த கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் நேற்று ஆப்ரேஷன் ஆம்லா கடலோர பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. 2 நாட்களுக்கு நடக்கும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை, தமிழக கடலோர பாதுகாப்பு போலீசார் ஆகியோர் இணைந்து நடத்தப்பட்டது.

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

இதற்காக நாகை கடலோர பகுதியில் கடலோர பாதுகாப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் போலீசார் பலத்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடல் பகுதியிலும், கடற்கரையோர பகுதியிலும் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் ஏதேனும் இருந்தால் அதுகுறித்த தகவலை போலீசாருக்கு தெரிவிக்குமாறு கடலோர பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கடலுக்கு சென்று மீன்பிடித்து வரும் மீனவர்களிடமும் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் பற்றி தெரியவந்தால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் பொதுமக்கள் கூடும் ஆன்மிக திருத்தலங்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம்

இதேபோல் வேதாரண்யம் கடலோர பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர்கவஜ் ஆப்ரேஷன் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி 2 நாட்கள் நடக்கிறது. அதன்படி ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உள்ளிட்ட கடலோர பாதுகாப்பு போலீசார் படகு மூலம் சென்று ஒத்திகையில் ஈடுபட்டனர்.

மேலும் வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு போன்ற மீனவ கிராமங்களில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கடல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் யாரேனும் தெரிந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தர வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்