மகளிர் வாழ்வாதார சேவை மையம் திறப்பு
திண்டுக்கல்லில், மகளிர் வாழ்வாதார சேவை மையம் திறக்கப்பட்டது.
திண்டுக்கல் கோபாலசமுத்திரம் பூமாலை வணிக வளாகத்தில் மகளிர் வாழ்வாதார சேவை மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். விழாவில் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு மின்சார ஆட்டோ, கடன் பெற மானிய உதவித்தொகைக்கான கடிதம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
இதில் கலெக்டர் பேசுகையில், தொழில் தொடங்க விரும்பும் அனைவருக்கும் தமிழக அரசு கடன் உதவி வழங்க தயாராக இருக்கிறது. அந்த வகையில் பல திட்டங்கள் மூலம் மானியத்துடன் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. எனவே அரசின் உதவியுடன் மக்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும். மேலும் தொழில் தொடங்கி தங்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்வதோடு, பலருக்கு வேலை வழங்க வேண்டும். அதோடு கடனை முறையாக திரும்ப செலுத்த வேண்டும். அதேபோல் பிறர் தொழில் தொடங்கவும் உதவியாக இருக்க வேண்டும், என்றார்.
நிகழ்ச்சியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் சரவணன், மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளர் கமலக்கண்ணன், அதிகாரிகள், மகளிர் உதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.