பாசன வசதிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீ்ர திறப்பு
பாசன வசதிக்காக பாபநாசம் அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு நேற்று தண்ணீர் திறந்து வைத்தார்.;
விக்கிரமசிங்கபுரம்:
பாசன வசதிக்காக பாபநாசம் அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு நேற்று தண்ணீர் திறந்து வைத்தார்.
அணையில் தண்ணீர் திறப்பு
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சுமார் 32 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடக்கிறது. இந்த நிலையில் கார்பருவ சாகுபடிக்காக நேற்று முதல் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று பாபநாசம் அணையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு, எம்.எல்.ஏ.க்கள் நாங்குநேரி ரூபி மனோகரன், அம்பை இசக்கி சுப்பையா, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-
32 ஆயிரத்து 815 ஏக்கர்
பாபநாசம் அணை மூலம் பாசன வசதி பெறும் கால்வாய்களான வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன், கோடகன், பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் மூலம் 32 ஆயிரத்து 815 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. ஜூன் 3-ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளில், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது அனைவருக்கும் பெருமை ஆகும்.
வருகிற அக்டோபர் மாதம் 12-ந்தேதி வரை 132 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். முதல்கட்டமாக நடவு முன்பணியான நாற்று பயிரிடுவதற்கு 15 முதல் 20 நாட்களுக்கு வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும். பின்னர் நீர் இருப்பு மற்றும் தேவையை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படும். இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மாதேவி, நெல்லை, பாளையங்கோட்டை ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்கள் பயன்பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகரன், உதவி செயற்பொறியாளர் மாரியப்பன், வேளாண்மை துறை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன், மின்சாரத்துறை செயற்பொறியாளர் வெங்கடாச்சலம், உதவி செயற்பொறியாளர்கள் தங்கராஜன், பேச்சிமுத்து, முருகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், விக்கிரமசிங்கபுரம் நகரசபை தலைவர் செல்வசுரேஷ் பெருமாள், சிவந்திபுரம் ஊராட்சி தலைவர் ஜெகன், அம்பை தாசில்தார் ஆனந்த பிரகாஷ், உதவி பொறியாளர்கள் ரமேஷ்குமார், மகேஷ்வரன், வினோத்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.