கடனாநதி, ராமநதி அணைகளில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து பாசனத்துக்கு கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நேற்று தண்ணீர் திறந்து வைத்தார்.
கடையம்:
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ராமநதி அணையில் இருந்து வடகால், தென்கால் மற்றும் பாப்பான் கால் ஆகியவற்றின் நேரடி பாசன நிலங்களுக்கும், கடனாநதி அணையில் இருந்து அரசபத்து, வடகுறுவபத்துகால், ஆழ்வார்குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சப்புளி கால், காக்கநல்லூர் கால், காங்கேயன்கால் ஆகியவற்றின் நேரடி பாசன நிலங்களுக்கும் நேற்று முதல் வருகிற நவம்பர் மாதம் 16-ந்தேதி வரை நீர் இருப்பு நிலவரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி நேற்று ராமநதி, கடனாநதி அணைகளில் இருந்து மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தண்ணீரை திறந்து வைத்தார்.
தற்போது ராமநதி அணையில் நீர்மட்டம் 71 அடியாகவும், கடனாநதி அணையில் நீர்மட்டம் 63 அடியாகவும் உள்ளது. ராமநதி அணையில் இருந்து வினாடிக்கு 60 கனஅடிக்கு மிகாமலும், கடனாநதி அணையில் இருந்து வினாடிக்கு 125 கனஅடிக்கு மிகாமலும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன்மூலம் தென்காசி, நெல்லை மாவட்டங்களில் 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன், பஞ்சாயத்து தலைவர்கள் பூமிநாத் (கீழக்கரை), கல்யாணசுந்தரம் (அந்தியூர்), பொன்சீலா பரமசிவன் (கடையம் பெரும்பத்து), முருகன் (பாப்பான்குளம்), கணேசன் (பொட்டல்புதூர்), ஜன்னத் சதாம் (தருமபுரமடம்), உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் கணபதி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.