பகுதிநேர ரேஷன் கடை திறப்பு
பகுதிநேர ரேஷன் கடையை தேவராஜ் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்.
கந்திலி தெற்கு ஒன்றியம், மண்டலநாயனகுண்டா ஊராட்சி காட்டுகொல்லை பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், தேவராஜ் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
அதைத்தொடர்ந்து புதிய பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி. அசோக்குமார் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக க.தேவராஜி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றியும், ரிப்பன் வெட்டியும் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து மண்டலநாயனகுண்டா அரசு உயர்நிலைப்பள்ளியில் சேதமடைந்த கட்டிடத்தை பார்வையிட்டார். பின்னர், அங்கு கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி, புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தையும் ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், திருப்பத்தூர் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், கூட்டுறவு சார்பதிவாளர் தர்மேந்திரன், சதாசிவம், வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர், தலைமை செயற்குழு உறுப்பினர் கு.ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.