கீழவல்லநாடு அருகே புதிய பகுதிநேர ரேஷன்கடை திறப்பு
கீழவல்லநாடு அருகே புதிய பகுதிநேர ரேஷன்கடை திறக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் தாலுகா கீழவல்லநாடு ஊராட்சிக்கு உட்பட்ட வல்லகுளம், புளியங்குளம், ஆச்சிக்காடு, ஈச்சந்தாஓடை ஆகிய குக்கிராமங்களில் உள்ள ஊர் பொதுமக்கள், "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற திட்டத்தின் மூலம் இந்தபகுதியில் பொதுமக்களுக்கு பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்திருந்தனர்.
அந்த மனு மீது ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா துரித நடவடிக்கை எடுத்து புதிதாக ரேஷன் கடை அமைக்கும் பணி முருகன்புரத்தில் நடைபெற்று முடிவடைந்தது. இந்த பகுதி நேர ரேஷன் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சண்முகையா எம்.எல்.ஏ. திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் அந்தோணி, பகுதி அலுவலர் பரமசிவன், கீழ வல்லநாடு கிராம நிர்வாக அலுவலர் விஜயமூர்த்தி, கீழவல்லநாடு பஞ்சாயத்து தலைவர் முத்து இசக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.