ரூ.1.77 கோடியில் 35 புதிய வீடுகள் திறப்பு; சபாநாயகர் அப்பாவு பயனாளிகளுக்கு சாவி வழங்கினார்

சமூகரெங்கபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.1.77 கோடியில் 35 புதிய வீடுகள் கட்டப்பட்டு திறக்கப்பட்டன. சபாநாயகர் அப்பாவு பயனாளிகளுக்கு வீட்டின் சாவிகளை வழங்கினார்.

Update: 2023-09-17 18:45 GMT

வள்ளியூர்:

சமூகரெங்கபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.1.77 கோடியில் 35 புதிய வீடுகள் கட்டப்பட்டு திறக்கப்பட்டன. சபாநாயகர் அப்பாவு பயனாளிகளுக்கு வீட்டின் சாவிகளை வழங்கினார்.

35 புதிய வீடுகள்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சமூகரெங்கபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.1.77 கோடியில் புதிதாக 35 வீடுகள் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் புதிய வீடுகளை திறந்து வைத்தார்.

தொடர்ந்து சமூகரெங்கபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு குத்துவிளக்கு ஏற்றி, பயனாளிகளுக்கு புதிய வீட்டின் சாவிகள் மற்றும் வீட்டு உபயோக பாத்திரங்களை வழங்கினார். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மரக்கன்றுகளையும் நட்டினார். மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

சிறப்பான திட்டங்கள்

அகதிகள் முகாம் என்பதை இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பெருமாள்புரம், கங்கைகொண்டான், கோபாலசமுத்திரம், ஆலடியூர், சமூகரெங்கபுரம் ஆகிய 5 இடங்களில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் அமைந்துள்ளன.

5 முகாம்களிலும் மொத்தம் 639 குடும்பங்களைச் சேர்ந்த 1,867 இலங்கை தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இலங்கை தமிழர்களுக்காக பெருமாள்புரத்தில் 48 வீடுகள், கங்கைகொண்டானில் 40 வீடுகள், கோபாலசமுத்திரத்தில் 100 வீடுகள், ஆலடியூரில் 46 வீடுகள், சமூகரெங்கபுரத்தில் 35 வீடுகள் கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக சமூகரெங்கபுரத்தில் இலங்கை தமிழர்களுக்கு 35 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. தற்போது கங்கைகொண்டான் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 40 புதிய வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது. அங்கு புதிய வீடுகள் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மற்ற முகாம்களில் வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு வரப்பெற்றவுடன் பணிகள் தொடங்கப்படும்.

உதவித்தொகை

முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு மாதந்தோறும் குடும்பத்தலைவருக்கு ரூ.1,500-ம், ஏனைய பெரியவர்களுக்கு தலா ரூ.1,000-ம், 13 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கு தலா ரூ.500-ம் என்ற விகிதத்தில் மாதந்தோறும் 5-ந்தேதிக்குள் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் நியாயவிலை கடைகள் மூலமாக 8 வயதிற்குட்பட்ட சிறியவர்களுக்கு தலா 6 கிலோ என்ற விகிதத்திலும், ஏனைய பெரியவர்களுக்கு தலா 12 கிலோ என்ற விகிதத்திலும் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

முகாம்களில் தங்கியிருந்து கல்லூரியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி தகுதிக்கேற்ப உதவித்தொகை வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து இலங்கை தமிழர்களுக்கும் இலவச துணிகள் வழங்கப்பட்டு வருகிறது. முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, இலவச அடுப்பு, இலவச சிலிண்டர் ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு இலங்கை தமிழர் குடும்பத்திற்கும் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.400 வீதம் 5 சிலிண்டர்களுக்கு வருடந்தோறும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 5 முகாம்களில் உள்ளவர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 119 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையும், 56 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகையும், 8 பயனாளிகளுக்கு ஆதரவற்றோர் விதவை உதவித்தொகையும், 7 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையும் என மொத்தம் 190 பயனாளிகளுக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் இலங்கை தமிழர் மறுவாழ்வு தாசில்தார் திருப்பதி, ராதாபுரம் தாசில்தார் வள்ளிநாயாகம், உதவி திட்ட அலுவலர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிளாரன்ஸ் விமலா, நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் காந்திமதி, பஞ்சாயத்து தலைவர் அந்தோணி அருள், துணைத்தலைவர் பேச்சியப்பன், ஊராட்சி செயலாளர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்