வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 34 கடைகள் திறப்பு

வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 34 கடைகள் திறப்பு

Update: 2022-10-01 20:07 GMT

தஞ்சை பெரியகோவில் அருகே வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 34 கடைகள் திறக்கப்பட்டன.

பொம்மை கடைகள்

தஞ்சை பெரியகோவில் முன்பு தலையாட்டி பொம்மைகள், நடன பொம்மைகள் உள்ளிட்ட பொம்மைகள் விற்பனை செய்யப்படும் கடைகள் செயல்பட்டு வந்தன. கடந்த 2010-ம் ஆண்டு நடந்த பெரியகோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது இந்த கடைகள் எல்லாம் அகற்றப்பட்டு, எதிரே வாகனம் நிறுத்தும் பகுதியில் கடைகள் வைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பெரியகோவிலுக்கு வெளியூர்களில் இருந்து வாகனங்களில் பக்தர்கள் வருகை அதிகரித்து வந்ததால் வாகனம் நிறுத்தும் இடத்தில் இட நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கே இருந்த பொம்மை கடைகள் எல்லாம் கடந்த 2014-ம் ஆண்டில் வியாபாரிகள் எதிர்ப்பை மீறி அகற்றப்பட்டன.

கடைகள் ஒதுக்கீடு

இதனால் வியாபாரிகள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் மாவட்ட நிர்வாகத்திடமும் கடைகள் வைக்க இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர். இதையடுத்து தஞ்சை பர்மா பஜார் அருகிலும், சிவகங்கை பூங்கா அருகில் உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்திலும் கடைகள் வைக்க இடம் ஒதுக்கீடு செய்வதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த இடங்களில் கடைகள் அமைத்தால், வியாபாரத்துக்கு பயன் தராது என்பதால், பெரியகோவில் அருகிலேயே இடம் ஒதுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று பெரியகோவில் மிருகவதை தடுப்புச் சங்க அலுவலகம் இருந்த இடத்தில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

34 கடைகள் திறப்பு

இதையடுத்து பெரியகோவில் புதுஆற்றுப்பாலம் அருகே 34 கடைகள் தகரத்தினால் அமைக்கப்பட்டு, வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கடைகள் எல்லாம் நேற்று திறக்கப்பட்டது. இந்த கடைகளில் தலையாட்டி பொம்மைகள், நடன பொம்மைகள், வளையல்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கடைக்கு மாத வாடகையாக ரூ.3 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்