திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உண்டியல் திறப்பு

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

Update: 2023-02-17 18:45 GMT

திருப்பரங்குன்றம், 

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 40 நிரந்தர உண்டியல்களும், திருப்பணி மற்றும் யானை உண்டியல் என்று தலா ஒரு உண்டியலுமாக சேர்த்து 42 உண்டியல்கள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த உண்டியல்கள் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கோவில் துணை கமிஷனர் சுரேஷ் தலைமையில் அழகர்கோவில் துணை கமிஷனர் ராமசாமி, தக்கார் பிரதிநிதி செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறப்பு நடைபெற்றது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் ஸ்கந்தகுரு, வேத சிவகாமபாடசாலை மாணவர்கள், அய்யப்ப சேவகத்தினர் ஈடுபட்டனர். அதில், ரொக்கமாக 29 லட்சத்து 42 ஆயிரத்து 9 ரூபாய் இருந்தது. மேலும் 170 கிராம் தங்கமும், 2 கிலோ 910 கிராம் வெள்ளியும் கிடைத்தது. நிகழ்ச்சியில் கோவில் அலுவலக சூப்பிரண்டு ரஞ்சினி, உள்துறை சூப்பிரண்டு சுமதி, துணை கமிஷனரின் நேர்முக உதவியாளர் மணிமாறன், பேஷ்கார்கள் நெடுஞ்செழியன், புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், கோவில் உண்டியல் எண்ணும் பணியை இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் "யூடியூப்" இணையதளத்தில் நேரடியாக ஒளிப்பரப்பட்டது. அதை பார்த்த பக்தர்கள் வரவேற்று கருத்துகளை பதிவு செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்