திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய்
இடையக்கோட்டை பஸ்நிலையத்தில், திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இடையக்கோட்டை பஸ் நிலையத்தின் கிழக்குப்புறத்தில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாய் கட்டப்பட்டு, பலநாட்கள் உருண்டோடி விட்டது. ஆனால் இதுவரை மூடப்படவில்லை. இதனால் திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய் காட்சி அளிக்கிறது.
இதன் அருகே வங்கி, ஏ.டி.எம். மையம், ஓட்டல், மளிகை கடை, மருந்து கடை ஆகியவை உள்ளன. இங்கு வந்து செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கால்வாய்க்குள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவுநேரத்தில் கழிவுநீர் கால்வாயை தாண்டி செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாயை சிமெண்டு மூடி கொண்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.