ஓ. பன்னீர்செல்வம் திமுகவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
ஓ. பன்னீர்செல்வம் திமுகவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.;
சென்னை,
தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவுடன் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கில் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணமும், பிரியாணியும் கொடுக்கின்றனர். பணநாயகத்தைவிட, ஜனநாயகத்தைத்தான் நாங்கள் நம்புகிறோம். வாக்காளர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்கிறார்கள். மனதை மாற்ற சுற்றுலா அழைத்து செல்லும் கேலிக்கூத்தான, கேவலமாக ஆட்சியை பேசும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவுகின்றனர்.
கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என நாங்கள் ஒருமித்த கருத்துடன் தான் இருந்தோம். ஓ.பன்னீர்செல்வம் திமுகவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார். அவர் ஆட்டக்களத்திலேயே இல்லை, நாக் அவுட் ஆகிவிட்டார்.
எங்கள் ஆட்சியில் படிப்படியாக மதுக்கடைகளை குறைத்தோம். இந்த ஆட்சியில் தவறுசெய்தால் விமர்சனம் வரத்தான் செய்யும். பணநாயகத்தைவிட, ஜனநாயகத்தைத்தான் நாங்கள் நம்புகிறோம். திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை இல்லாத நாட்களே இல்லை. தினந்தோறும் கொலை , கொள்ளை குறித்த செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
இந்த ஆட்சியில் காவல்துறை செயல்படவில்லை. அம்மா ஆட்சியில் காக்கிச்சட்டை போடுவது கெளரவமாக பார்க்கப்பட்டது. இந்த ஆட்சியில் ஏன் காக்கிச் சட்டை போடுகிறோம் என நினைக்கிறார்கள். ஒரு திரைப் படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகம் இழிவுபடுத்தப்படும்போது, இந்த இந்த காட்சிகளை நீக்குங்கள் என அம்மா சொன்னார். கமல்ஹாசன் இன்று பேசுவது போல அம்மா இருக்கும்போது சொல்ல வேண்டியதுதானே . உண்மையை திரித்து பேசக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.