"ஓ.பன்னீர்செல்வமும், நானும் சுயநலத்துக்காக இணையவில்லை"; தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேச்சு

ஓ.பன்னீர்செல்வமும், நானும் சுயநலத்துக்காக இணையவில்லை என்றும், ஜெயலலிதாவின் கட்சியும், சின்னமும் துரோகத்தால் சிலர் அபகரித்து விட்டதாகவும் தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.

Update: 2023-08-01 21:00 GMT

ஓ.பன்னீர்செல்வமும், நானும் சுயநலத்துக்காக இணையவில்லை என்றும், ஜெயலலிதாவின் கட்சியும், சின்னமும் துரோகத்தால் சிலர் அபகரித்து விட்டதாகவும் தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.

ஆர்ப்பாட்டம்

கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தியும், நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க.வினரும் பங்கேற்பார்கள் என்று, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் அ.ம.மு.க.வினர் இணைந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி பங்களாமேட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

உண்மை தொண்டர்கள்

நம்மோடு இருந்தவர்களில், 90 சதவீதம் பேர் இன்றைக்கு நம்மோடு தான் இருக்கிறார்கள். யாரோ ஒரு சிலர் விலை போயிருக்கலாம். ஆனால் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள், எதற்கும் விலை போகாத தொண்டர்கள், எங்கள் இருவரின் பின்னால் திரண்டு இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

கோடநாடு பங்களாவில் காவலாளியை கொலை செய்துவிட்டு கொள்ளையடித்த சம்பவம், அதைத்தொடர்ந்து சில தற்கொலை, விபத்துகளில் சிலர் இறந்ததற்கு காரணமானவர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும். அதற்கு காரணமானவர்கள் யார்? என்பதும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும்.

தேர்தல் வாக்குறுதி

ஆட்சிக்கு வந்தால் 90 நாட்களுக்குள் கோடநாடு கொலை குற்றவாளிகளை சிறையில் அடைப்போம் என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் தாண்டிவிட்டது. 3 மாதங்களில் பிடித்து விடுவோம் என்று சொன்னவர்களுக்கு, 30 மாதங்கள் தாண்டிவிட்டது. வழக்கம்போல், இந்த தேர்தல் வாக்குறுதியையும் மு.க.ஸ்டாலின் மறந்து விட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு உண்மையான குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என்றார்கள். இதுவரை கைது செய்யாத காரணத்தால் தான், கைது செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் இந்த போராட்டத்தை அறிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் பின்னால் நிற்கும் தொண்டர்கள், அ.ம.மு.க.வின் தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும், நமக்குள் இருந்த வருத்தங்களை எல்லாம் விட்டுவிட்டு இன்றைக்கு ஒன்றிணைந்து இருக்கிறோம்.

சுயநலத்துக்காக அல்ல

இயற்கையாக தமிழ்நாடு முழுவதும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் இணைந்து விட்டோம். ஜெயலலிதா என்ற மையப் புள்ளியில் இணைந்து இருக்கிறோம். இங்கு இருப்பவர்கள் எல்லாம் தொண்டர் படை. அங்கிருப்பவர்கள் குண்டர் படை. டெண்டர் படை.

எங்களுக்கு பொழுது போகாமல் போராட்டம் நடத்துவதாகவும், அச்சாணி இல்லாத வண்டி அ.ம.மு.க. என்றும் ஒருத்தர் சொல்லி இருக்கிறார். அவர்களுக்கு அச்சாணி என்றால் என்னவென்று தெரியுமா? ஒரு இயக்கத்தின் உண்மையான அச்சாணி என்பது விசுவாசமிக்க தொண்டர்கள். அவர்கள் கண்ணுக்கு தொண்டர்களின் விசுவாசம் என்றால் என்ன என்று தெரியாது. துரோகம் மட்டுமே தெரிந்தவர்கள். அவர்கள் மடியில் கனம் உள்ளவர்கள். அவர்களுக்கு வருங்காலம் நிரூபிக்கும். நாங்கள் இருவரும் இணைந்து இருப்பது சுயநலத்துக்காக அல்ல. நானோ, ஓ.பன்னீர்செல்வமோ முதல்-அமைச்சராக வேண்டும் என்பதற்காக அல்ல.

சின்னமும், கட்சியும் அபகரிப்பு

ஜெயலலிதாவின் கட்சியும், சின்னமும், இன்றைக்கு துரோகத்தால் ஒரு சிலரால் அபகரிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து அதை மீட்டெடுத்து ஜெயலலிதாவின் தொண்டர்கள் கையில் கொடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். கோடநாடு கொலை, கொள்ளையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அரசு உடனே கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆமை வேகத்தில்...

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

24-4-2017 அன்று கோடநாடு பங்களாவில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, கிருஷ்ணபகதூர் என்ற காவலாளி படுகாயப்படுத்தப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதா டிரைவராக இருந்த கனகராஜ் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று சொல்லப்பட்ட சயான், அவருடைய மனைவி, குழந்தை ஆகியோர் காரில் சென்ற போது லாரியை மோதவிட்டு விபத்தை உருவாக்கி சயானின் மனைவியும், குழந்தையும் படுகொலை செய்யப்பட்டது குறித்தும், கோடநாடு பங்களாவில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக இருந்தவரையும் கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த வழக்கு விசாரணை ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

உண்மை குற்றவாளிகள் யார் என்பதை மக்களிடம் அடையாளம் காட்ட வேண்டும். கொலை செய்தவர்கள் யார்?, அதற்கு பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் யார்? என்பதை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்.

சம்பவம் நடந்த அன்று இரவு தடையில்லா மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த மின்சாரத்தை யார் துண்டித்தது?, துண்டிக்க சொல்லி உத்தரவிட்டவர்கள் யார்? என்பதை எல்லாம் நாட்டு மக்களிடம் தெரியப்படுத்தி தண்டிக்க வேண்டும். தீர்வு வருவதற்கு தாமதமானால் அ.ம.மு.க.வுடன் இணைந்து மிகப்பெரிய போராட்டம் தமிழ்நாடு முழுவதும் வெடிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒரே மேடையில்...

தேனியில் சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் ஒரே மேடையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினர். இதனால், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர்.

ஆர்ப்பாட்ட கோஷங்களை ஓ.பன்னீர்செல்வம் எழுப்பினார். அவரோடு தினகரன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து கோஷங்கள் எழுப்பினர்.

கலந்துகொண்டவர்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர் சையதுகான், மாவட்ட மகளிரணி செயலாளரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான பிரிதா நடேஷ், தேனி வடக்கு நகர செயலாளர் ரெங்கநாதன், துணைச்செயலாளர் மயில்வேல், ஒன்றிய செயலாளர்கள் முத்துபாலாஜி (தேனி மேற்கு), சுந்தர்ராஜ் (போடி மத்தி), செல்வகணபதி (போடி கிழக்கு), குருமணி (போடி மேற்கு), இளையராஜா (ஆண்டிப்பட்டி மேற்கு), நாகராஜ் (ஆண்டிப்பட்டி கிழக்கு), கடமலை-மயிலை தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் இளம்வழுதி பாண்டியன், கம்பம் வடக்கு நகர செயலாளர் ஆர்.ஆர்.ஜெகதீஸ், கம்பம் தெற்கு நகர செயலாளர் செந்தில்குமார், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட இணைச்செயலாளர் மணவாளன், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் முத்துச்சாமி, ஜெயக்குமார், கம்பம் நகர செயலாளர் ராஜாமணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்