தேசிய அளவிலான மலையேற்ற பயிற்சிக்கு ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவி தேர்வு
தேசிய அளவிலான மலையேற்ற பயிற்சியில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவி தேர்வாகியுள்ளார்.
ஊட்டி
தேசிய அளவிலான மலையேற்ற பயிற்சியில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவி தேர்வாகியுள்ளார்.
தேசிய மாணவர் படை
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் 31-வது தமிழ்நாடு என்சிசி., தனி பிரிவு மூலம் செயல்படும் தேசிய மாணவர் படையில் 100 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். தேசிய மாணவர் படையில் இந்திய அளவில் பல்வேறு சாகச முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் உத்தரகாண்ட் மாநிலம் உத்ரகாசியில் என்சிசி., மாணவ, மாணவிகளுக்கான மலையேறும் பயிற்சி முகாம் கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொள்ள பல்வேறு கட்ட தேர்வுக்கு பின்னர் தமிழ்நாட்டில் இருந்து 2 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
ஊட்டி மாணவி தேர்வு
இதில் ஊட்டி அரசு கலை க்கல்லூரியில் பி.ஏ., பாதுகாப்பியல் துறையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி அம்ரிஷா தேர்வாகியுள்ளார். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆளவந்தான் குளம் ஆகும்.
ஊட்டி அரசு கலைக்கல்லூரி என்சிசி., மாணவி அம்ரிஷா, மலையேற்ற பயிற்சியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று நீலகிரிக்கு பெருமை சேர்த்துள்ளார். பல்வேறு கட்ட பயிற்சிக்கு பின் மலையேற்ற பயிற்சியை வெற்றிகரமாக முடித்த மாணவி அம்ரிஷாவிற்கு 31-வது தமிழ்நாடு தனிப்பிரிவு என்சிசி., அலுவலர் கர்னல் சீனிவாஸ், கல்லூரி முதல்வர் அருள் அந்தோனி, கல்லூரி என்சிசி., அலுவலர் விஜய் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மாணவ, மாணவிகள் பாராட்டு தெரிவித்தனர்.