ஊட்டி புளூ மவுண்டன் வாரியர்ஸ் அணி வெற்றி
மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டியில் ஊட்டி புளூ மவுண்டன் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.
கோத்தகிரி,
மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டியில் ஊட்டி புளூ மவுண்டன் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.
லீக் போட்டி
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட ஏ டிவிஷன், பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள் கோத்தகிரியில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பிரிவிலும் தலா 10 அணிகள் மாவட்டம் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்தநிலையில் ஏ டிவிஷன் பிரிவில் ஊட்டி கேலக்ஸி அணிக்கும், கூடலூர் அணிக்கும் இடையே லீக் போட்டி கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்றது.
போட்டி தாமதமாக தொடங்கியதால் 30 ஓவர்களை கொண்ட போட்டி 23 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேலக்ஸி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தது. அந்த அணியை சேர்ந்த ராஜ்குமார் 82 ரன்கள், கவுதம் மற்றும் வெங்கடேஷ் தலா 32 ரன்கள் எடுத்தனர். கூடலூர் அணி வீரர் முரளி 4 விக்கெட்டுகளையும், ஆதர்ஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து கூடலூர் அணி அதிரடியாக விளையாடி 20.5 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3 புள்ளிகள்
அந்த அணியின் வீரர் முரளி 77 ரன்கள், சிவகுமார் 65 ரன்கள் எடுத்தனர்.நேற்று முன்தினம் ஸ்பார்டன், ஊட்டி புளூ மவுண்டன் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே லீக் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஸ்பார்டன் அணி 30 ஓவர்கள் கொண்ட போட்டியில் 20-வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் எடுத்தது. அந்த அணி வீரர் அருண் கே.நாயர் அதிகபட்சமாக 36 ரன்களை எடுத்தார். புளூ மவுண்டன் வாரியர்ஸ் அணியின் பந்து வீச்சாளர் டிங்கு பிரசீத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புளூ மவுண்டன் வாரியர்ஸ் அணி 24.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணி வீரர் சிபி 32 ரன்களை எடுத்தார். வெற்றி பெற்ற கூடலூர் மற்றும் ஊட்டி புளூ மவுண்டன் வாரியர்ஸ் அணிக்கு தலா 3 புள்ளிகள் வழங்கப்பட்டன.