கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் நாடு வளர்ச்சி அடையும்

கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் அந்நாட்டின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும் என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.

Update: 2023-08-16 18:45 GMT


கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் அந்நாட்டின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும் என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.

கிராம சபை கூட்டம்

நாகை அருகே குறிச்சி ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. நாகை மாலி எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங், ஊராட்சிகளில் உதவி இயக்குனர் (பொ) மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய தேசிய தினங்களில் கட்டாயமாக கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இது தவிர அரசால் அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து விவாதித்து ஒப்புதல் பெறுவதற்கு சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தேவையான திட்டங்கள்

கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால் தான், நாடு வளர்ச்சி அடையும். அதன் அடிப்படையில் கிராம சபை கூட்டங்கள் வாயிலாக அந்தந்த கிராமங்களில் வசிக்கும் மக்களின் கருத்தறிந்து அதனடிப்படையில் திட்டங்கள் உறுதி செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்படுகிறது.

இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம் நமக்கு தேவையான திட்டங்கள் என்ன என்பதை முதலில் பொதுமக்களாகிய நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இக்கூட்டத்தை பொருத்தவரை மக்களே மக்களுக்கு தேவையான விஷயங்களை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மூலமாக செயல்படுத்திக்கொள்வது ஒரு சிறந்த வாய்ப்பு.

முன்வரவேண்டும்

மேலும் மாணவ-மாணவிகள் கல்வி இடைநிற்றலை தவிர்த்து உயர்கல்வி, கல்லூரி, போட்டித்தேர்வு மற்றும் பயிற்சிகள் என அனைத்திலும் முன்வரவேண்டும் என்றார்.

முன்னதாக குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சிராணி சிந்தாதுரை வரவேற்றார். சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஜோஸ்பின் அமுதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி, கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டது.

திருமருகல்

திருமருகல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் சுதந்திரதின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி அலுவலர் பழனிவேல், துணைத்தலைவர் முத்து முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு வல்லுனர் லியாக்கத் அலி கலந்துகொண்டு கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

இதில் ஊராட்சி செயலர் பிரகாஷ்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அதேபோல் ஒவ்வொரு ஊராட்சியிலும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கார்த்தி (நரிமணம்), சரவணன் (கட்டுமாவடி), கண்ணன் (திருமருகல்), கார்த்திகேயன் (திருப்புகலூர்), தமிழரசி பக்கிரிசாமி (அகரக்கொந்தகை) ஆகியோர் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

சிக்கல்

கீழ்வேளூர் ஒன்றியம் பட்டமங்கலம் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றித்தர வேண்டும்.

கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பட்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா ரவிச்சந்திரன், கிராம சபை கூட்ட மேற்பார்வையாளர் கீர்த்தனா ஆகியோரிடம் பட்டமங்கலம் விவசாயிகள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்