40 தொகுதியிலும் வெற்றி பெற்றால்தான் மத்தியில் அமையும் ஆட்சியில் தி.மு.க. முக்கிய பங்காற்ற முடியும்: முதல்-அமைச்சர் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற்றால்தான் மத்தியில் அமையப் போகும் ஆட்சியில் தி.மு.க. முக்கிய பங்காற்ற முடியும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
நெய்வேலி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன் - அங்கயற்கண்ணி தம்பதியின் மகன் இரா.சுமந்துக்கும், சாரங்கபாணி செல்வராணி தம்பதியின் மகள் சா.தனரஞ்சனிக்கும் நெய்வேலியில் நேற்று திருமணம் நடைபெற்றது.
இதில், தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். சென்னையில் இருந்து காணொலி காட்சி வழியாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திருமண விழாவில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜனாதிபதி அழைப்பு
ஜி-20 மாநாட்டையொட்டி ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் டெல்லி சென்றுவிட்டேன். இந்த செய்தியை சபா.ராஜேந்திரனுக்கு நான் தொலைபேசி வாயிலாக தெரிவித்தேன். அவரும் என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டு, "நீங்க போய்விட்டு வாங்கண்ணா" என்று பாசத்தோடு சொன்னார்.
சபா. ராஜேந்திரனின் குடும்பமும் என் குடும்பம்தான். அதனாலதான், எனக்குப் பதிலாக, நம்முடைய இளைஞரணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி கலந்து கொள்வார் என்று அவரிடம் சொன்னேன். டெல்லியில் இருந்தாலும், என்னுடைய எண்ணங்கள் எல்லாம் நெய்வேலியில்தான் இருக்கிறது.
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்
சபா.ராஜேந்திரன் 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி வருகிறார். தனது தொகுதிக்கு தேவையான திட்டங்களை கேட்டுப் பெறுவதில், சபா.ராஜேந்திரன் எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருப்பார். இது என்னைவிட நெய்வேலி தொகுதி மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.
இதை எல்லாம் பார்க்கும்போது, சபா.ராஜேந்திரனை - சபாஷ் ராஜேந்திரன் என்று சொல்லத் தோன்றுகிறது. பொதுவாக, திருமண விழாக்களில் கலந்து கொள்ளும்போது, என்னோட பேச்சின் இறுதியில், நான் 2 கோரிக்கைகள் வைப்பேன். மணமக்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்கிற முதல் கோரிக்கை.
நாடும் நன்றாக இருக்க வேண்டும்
ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவிலே நான் அந்தக் கோரிக்கையை வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். கண்டிப்பாக தமிழில் தான் பெயர் வைப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். அதேபோல, இன்னொரு கோரிக்கை என்னவென்றால், மணமக்கள் வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்கு தொண்டர்களாக விளங்க வேண்டும் என்று சொல்வேன். நம்முடைய வீடு மட்டும் அல்ல, நாடும் நன்றாக இருக்க வேண்டும். அதற்காகவும் பங்களிக்க வேண்டும் என்று சொல்வேன்.
நம்முடைய நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும். ஆகவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் இருக்கிற 40 தொகுதிகளிலும் நாம் ஜெயித்தாக வேண்டும். அப்படி முழு வெற்றியை பெற்றால்தான் அடுத்து அமையப்போகிற மத்திய ஆட்சியிலும் நாம் முக்கிய பங்காற்ற முடியும்.
நாம் எல்லோரும் சேர்ந்து உழைக்க இந்த திருமண விழாவில் உறுதி எடுத்துக்கொண்டு, "நாற்பதும் நமதே நாடும் நமதே" என்ற முழக்கத்துடன் விடை பெறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.